கோவை வழித்தடத்தில் முழுமையாக இயக்கப்படாத தனியார் பேருந்துகள்-கன்ஸ்யூமர் வாய்ஸ் குற்றச்சாட்டு..!

கோவையில் வழித் தடத்தில் முழுமையாக இயக்கப் படாத தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

கோவை, பாலசுந்தரம் சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், வட்டார போக்குவரத்து அலுவலர் சிவகுருநாதன் தலைமையில் நுகர்வோர் அமைப்புகளுடனான குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பாலகுமார், சத்யகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பின் செயலர் நா.லோகு கூறும்போது:

கோவையில் 30 க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் அனுமதிக்கப்பட்ட வழித் தடத்தில் முழுமையாக செல்லாமல் பயணிகளை இடையிலேயே இறக்கி விடுகின்றனர். இதனால், பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, வழித் தடத்தில் முழுமையாக இயக்கப்படாத பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். பேருந்துகள் இயக்கப்படாத சிட்ரா முதல் காளப்பட்டி வரையிலான பகுதியில் தகுதிச் சான்று பெறாமல் அதிக அளவில் ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. நகருக்குள் இயக்கப்படும் சில பேருந்துகளில் காற்று ஒலிப்பான் பொருத்தப்பட்டு உள்ளதால் பயணிகள், பாதசாரிகள் பாதிக்கப்படுகின்றனர். வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் சமீப காலமாக இடைத்தரகர்களின் தலையீடு அதிகரித்து உள்ளது. அவற்றைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.