கடந்த 9 ஆண்டுகளில் மருத்துவச் செலவுக்கு என்று அரசிடம் இருந்து 1 ரூபாய் கூட எடுக்காத பிரதமர் மோடி- ஆர்டிஐ தகவல்..!

டந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று முதல்முறையாக பிரதமரான மோடி, 2019ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமரானார்.

சர்வதேச அளவில் மிகுந்த சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவராக கருதப்படும் மோடி, தொடர்ந்து தன்னை ஏழைத்தாயின் மகன் ஆகவே முன்னிறுத்தி வருகிறார். தனிப்பட்ட முறையில் அவர் விலையுயர்ந்த உணவு வகைகள் மற்றும் ஆடைகளை பயன்படுத்துவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தாலும், இதுவரை அவை எதுவும் அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

இந்நிலையில் தான், புனேவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பிரஃபுல் சர்தா, பிரதமர் மோடிக்கான மருத்துவ செலவுகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதில் அளித்துள்ள பிரதமர் அலுவலகம்,  பிரதமர் பதவி ஏற்றது முதல் தனக்கான மருத்துவச் செலவு முழுவதையும் பிரதமர் மோடியே ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், அவரது மருத்துவ சிகிச்சைக்காக ஒரு ரூபாய்கூட அரசு செலவு செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளது. பிரதமர் அலுவலக செயலாளர் பினோத் பிஹாரி சிங் ஆர்டிஐ கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசியுள்ள சமூக ஆர்வலர் பிரஃபுல் சர்தா, ”ஆரோக்கியமான இந்தியா இயக்கம் மூலம் மக்களுக்கு செய்தியை அளிப்பதோடு மட்டுமன்றி, தானே உதாரணமாக இருந்து ஆரோக்கியமாக இருப்பது குறித்து 135 கோடி இந்தியர்களையும் மோடி ஊக்குவித்து வருகிறார். வரிசெலுத்துவோரின் பணம் எதுவும் பிரதமர் அலுவலகத்தின் தனிப்பட்ட பணிகளுக்கு பயன்படுத்தப்படவில்லை. இது பிரதமர் மோடியின் ஆளுமை மீதான நமது நம்பிக்கையை அதிகரித்து உள்ளது. பிரதமர் மோடியை போன்றே, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களின் தனிப்பட்ட மருத்துவ செலவுகள் ஏதேனும் இருந்தால், அதை தாங்களே ஏற்றுக்கொள்ளும் பிரதமரின் வழியை பின்பற்ற வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி, பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு ரூ.2,23,82,504 ஆகும். அவரிடம் ரொக்கமாக 35 ஆயிரத்து 250 ரூபாய் மட்டுமே இருப்பதாக கூறப்பட்டுள்ளது. பிரதமர் மோடியிடம் அசையா சொத்துக்கள் ஏதும் இல்லை எனவும், குஜராத்தின் காந்தி நகரில் இருந்த சொத்துக்களில் தனது பங்கை தானமாக வழங்கிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமருக்கு சொந்தமாக கார்கள் எதுவும் இல்லை எனவும், அவர் 1 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 4 தங்க மோதிரங்களை வைத்துள்ளதார். தபால் நிலையத்தில் ரூ. 9 லட்சம் மதிப்பில் தேசிய சேமிப்பு பத்திரங்களும், 1.89 லட்சம் மதிப்பில் காப்பீடும் அவர் பெயரில் உள்ளது. அண்மையில் பிரதமர் மோடியின் தாயார் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது