பாகிஸ்தான் புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு வாழ்த்துடன் அறிவுரை வழங்கிய பிரதமர் மோடி .!!

டெல்லி: பாகிஸ்தான் புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது.

இதனை ஆதரித்து 174 எம்பி.க்கள் வாக்களித்தனர். இதையடுத்து, புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் ஆளும், எதிர்க்கட்சிகள் தரப்பில் நடத்தப்பட்டது. இதில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சியின் சார்பில் ஷெபாஸ் ஷெரீப்பும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் (பிடிஐ) கட்சி தரப்பில் முன்னாள் வெளியுறவு அமைச்சரும், அக்கட்சியின் துணை தலைவருமான ஷா முகமது குரேஷியும் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டனர். இருவரது விண்ணப்பங்களும் நாடாளுமன்ற தலைமை செயலகத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

புதிய பிரதமரை தேர்தெடுக்கப்பதற்கான நாடாளுமன்ற நேற்று கூடியது. ஷெபாஸ் தேந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடந்தது. இம்ரான் கான் அரசு மீது கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்களித்த 174 எம்பிக்களும், ஷெபாசுக்கு ஆதரவாக வாக்களித்ததால், நாட்டின் 23வது பிரதமராக தேர்தெடுக்கப்பட்டார்.இந்த நிலையில், பாகிஸ்தான் புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பாகிஸ்தானின் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட மியான் முகமது ஷெபாஸ் ஷெரீபுக்கு எனது வாழ்த்துகள். பாகிஸ்தான் பயங்கரவாதம் இல்லாத பிராந்தியமாகவும் அமைதியும், ஸ்திரத்தன்மையும் நிலைக்கும் பகுதியாக இருக்க வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. அமைதியிருந்தால் வளர்ச்சிக்கான சவால்களை எதிர்கொண்டு மக்களின் நலனையும் வளத்தையும் உறுதி செய்யலாம்.’ என்று பதிவிட்டுள்ளார்.