சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வரும் பிரதமர் மோடி – டிஜிபி சைலேந்திரபாபு நேரில் ஆய்வு..!

பிரதமர் மோடி சென்னை வருவதையொட்டி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீஸார் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பிரதமர் மோடி வருகின்ற 8-ம் தேதி சென்னைக்கு வருகை தந்து சென்ட்ரல், பல்லாவரம் உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். இவரது வருகையையொட்டி சென்னை விமான நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சென்னை-கோயம்புத்தூர் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவை உட்பட இதர ரயில்வே திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு பிரதமர் வருகை தரவுள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, தமிழக டிஜிபி சைலேந்திரபாபு இன்று காலை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக பிரதமர் மோடி வருகையையொட்டி போலீஸாரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் வரைபடத்தை ஆய்வு செய்தார். அதன் பிறகு ரயில் நிலைய நடைமேடைகளில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் எவ்வளவு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும், எந்தெந்த பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும் என்பது குறித்தும் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது தொடர்பாகவும் ஆலோசனை வழங்கினார்.