வாழைக்கான விலை முன்னறிவிப்பு- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழம் வெளியிட்டது..!

கோவை:
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழத்தில் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின் விலை முன்னறிவிப்பு திட்டமானது, பூவன், கற்பூரவள்ளி, நேந்திரன் வாழைக்கான முன்னறிவிப்பு விலையை உருவாக்கியுள்ளது.

வேளாண் மற்றும் உழவர் அமைச்சகத்தின் இரண்டாவது முன்கூட்டிய அறிக்கையின் படி, 2021-2023 ஆண்டில் இந்தியாவில் வாழை 9.59 லட்சம் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு 351.31 லட்சம் டன் உற்பத்தி செய்துள்ளது. ஆந்திரா, மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், குஜராத், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகியவை வாழை பயிரிடும் முக்கிய மாநிலமாக உள்ளது.
தமிழகத்தில் 2021-2022 ஆண்டில் வாழை 1.01 லட்சம் எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு 39.39 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் கோவை, தேனி, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வாழை அதிகளவில் பயிரிடப்படுகிறது.
திருச்சி, நெல்லை, கடலூர், தேனி, கோவை ஆகியவை வாழைக்கான முக்கிய சந்தையாக உள்ளது. திருச்சியில் இருந்து அதிகளவில் வாழை பிறபகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. தற்போது கோவை சந்தைக்கு லால்குடி, கரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் முசிறி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வாழை வரத்து உள்ளது.

தேனியில் இருந்து திருச்சி சந்தைக்கு அதிகமாக அனுப்பப்படுகிறது. வர்த்தக மூலங்களின் அடிப்படையில், பண்டிகை காலங்களில் வாழையின் தேவை அதிகரித்தாலும், திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் வாழை பெருமளவில் சேதமடைந்துள்ளது. இந்நிலையில், விலை முன்னறிவிப்பு குழு கடந்த 10 ஆண்டுகளாக கோவை சந்தைகளில் நிலவிய பூவன், கற்பூரவள்ளி, நேந்திரன் விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. ஆய்வின் முடிவில், வரும் டிசம்பரில் பூவன் வாழையின் சராசரி பண்ணை விலை கிலோ ரூ.22 முதல் ரூ.24, கற்பூரவள்ளி கிலோ ரூ.25 முதல் ரூ.27, நேந்திரன் ரூ.40 முதல் ரூ.44 இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பருவ மழையை பொறுத்து விலையில் மாற்றங்கள் இருக்கும். எனவே, விவசாயிகள் தகுந்த விற்பனை முடிவுகளை எடுக்குமாறு வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.