பெண் குழந்தைகள்,தாய்மாமன் குடும்ப உறவைப் பேணும் பொன்னூஞ்சல் திருவிழா,மாமன் தோழ்களில் அமர்ந்து பவனி வந்த கன்னிப் பெண்களை பொன்னூஞ்சலில் அமர வைத்து மரியாதை செய்த நூற்றாண்டுகளாய் தொடரும் கொங்கு தமிழர் கலாச்சார திருவிழா நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ளது பண்டைய கொங்கு 26 நாடுகளின் தலைமை இடமான தற்போதைய சங்கரண்டாம் பாளையம் பட்டக்காரர் அரண்மனையில் மார்கழி திருவாதிரை முன்னிட்டு, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பொன்னூஞ்சல் திருவிழா, பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது.
முன்னதாக பட்டக்காரர் பாலசுப்பிரமணிய வேணாவுடையார் தலைமயில் கொங்கு பெரியகுலத்தவர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலிருந்தும்,அமெரிக்கா,ஆஸ்த்திரேலியா நாடுகளில் வாழும் கொங்கு பெரியகுலத்தைச்சார்ந்த
25-ஆயிரத்திற்கு அதிகமானோர் பொன்னூஞ்சல் விழாவில் கலந்துகொள்ள வருகை தந்தனர்.
முன்னதாக குலதெய்வ கோவில்கள்,பெரியநாயகி அம்மன் உட்பட 7-கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, குடும்பத்தில் முதலாவதாக தலைப் பிள்ளையாய் பிறந்த பெண் குழந்தைக்கு, பட்டாடைகள்,அணிகலன்கள் அணிவிக்கப்பட்டு விநாயகர் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டனர்.

அங்கு 16-வகை சீர்வரிசைகளுடன் காத்திருக்கும் அக் கன்னிப் பெண்ணின்
தாய்மாமன், கன்னி பெண் நெற்றியில் தங்க பட்டம் கட்டி, அப்பெண்ணை உறவினர் சூழ தனது தோள் மீது ஏற்றி அமரவைத்து, கொம்பு,நாதஸ்வர மேளங்கள் முழங்க ஊர்வலமாக சுமந்து வந்து பெரியவர்கள் ஆசியுடன், பொன் தகடுகளால் வேயப்பட்ட ஊஞ்சலில் அமர வைக்கப்பட்டனர்.இவ்விழாவில் பொன்னூஞ்சலில் அமர வைக்கப் படும் பெண்களால், கொங்கு குலப்பெருமை உயர்ந்து, அப்பெண் வாழ்நாளில் பிறந்த வீடும்,புகுந்த வீடும் போற்ற வாழ்க்கை பெருவாள் என்பது நூற்றாண்டுகளாய் தொடரும் நம்பிக்கை.
கரிகால் சோழ மன்னர் ஆட்சி காலத்தில், கரிகாலன் மகள் ஆதிமந்தை என்பவர், சேர நாட்டு மன்னன் அட்டன் ஆத்தி என்பவருக்கு மணம் முடிக்க, ஆதிமந்தையின் தாய் மாமன், இரும்பிடர் தலையர் பேருதவி செய்தார். அதன் நன்றியாக இரும்பிடர்தலையர் வம்சாவழியில் வந்த கொங்கு வேளாளர் பெரியகுல பெண்களுக்கு, தான் விளையாடிய பொன்னூஞ்சலையும் பரிசாக வழங்கி, அந்த பொன் ஊஞ்சலில் ஆடும் உரிமையையும் வழங்கியதாக வரலாறு.கொங்கு தமிழர்கள் பாரம்பரியம்,கலாச்சார மறபு மாறாமல், பல நூற்றாண்டுகளாக தொடரும் இப் பொன்னூஞ்சல் விழா, தாய் மாமனின் தலைசிறந்த உறவையும்,பெண் குழந்தைகளின் தெய்வீகத்தன்மையும் போற்றும் வகையில் நடத்தப்பட்டு வருவதாக விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த சமுதாயத்தினர் பெருமையுடன் கூறினர்.









