இன்று கோலாகலமாக துவங்கிய பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேரோட்டம்- நகருக்குள் போக்குவரத்து மாற்றம்.!!

பொள்ளாச்சி:பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், இன்று துவங்குகிறது. இதற்காக, போக்குவரத்து மாற்றம் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம், 15ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. கடந்த மாதம்,22ம் தேதி கம்பம் நடப்பட்டது முதல் பக்தர்கள், வேப்பிலை, மஞ்சள் நீர் ஊற்றி வழிபாடு செய்கின்றனர். மேலும், நேர்த்திக்கடனை செலுத்த பக்தர்கள் பூவோடு எடுத்து வழிபாடு செய்கின்றனர்.திருவிழாவின் முக்கிய நிகழ்வான மூன்று நாள் தேரோட்டம் இன்று துவங்குகிறது. விழாவையொட்டி காலை, 6:00 மணிக்கு மாவிளக்கு, 10:00 மணிக்கு திருக்கல்யாண உற்வசம், இரவு, 7:00 மணிக்கு தேரோட்டம் துவங்குகிறது.விநாயகப்பெருமான் தேர் முன்னே செல்ல, வெள்ளித்தேரில் அம்மன் பவனி வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இதற்காக, வெள்ளித்தேர், மரத்தேர் பராமரிப்பு செய்து, தயார் நிலையில் உள்ளது.நாளை (10ம் தேதி) இரண்டாம் நாள் தேரோட்டம், வரும், 11ம் தேதி மூன்றாம் நாள் தேரோட்டம், தேர்நிலைக்கு வருதல், பரிவேட்டை, தெப்பத்தேர் வைபவம் நடக்கிறது. தொடர்ந்து, 12ம் தேதி அம்மன் மஞ்சள் நீராடுதல், கம்பம் எடுத்தல், 14ம் தேதி மகா அபிேஷகமும் நடக்கிறது.தேர்த்திருவிழாவையொட்டி, பொள்ளாச்சி விழாக்கோலம் பூண்டுள்ளது. தேரோட்டத்தை காண பக்தர்கள் அதிகளவு வரக்கூடும். இதனால், போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.தேரோட்டத்தையொட்டி, பொள்ளாச்சி நகருக்குள் மூன்று நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

முதல் நாளான இன்று, கோவில் வளாகத்திலிருந்து மார்க்கெட் ரோடு வழியாக சென்று, வெங்கட்ரமணன் வீதியில், தேர் நிறுத்தம் செய்யப்படுகிறது.இதனால், கோட்டூர் ரோட்டில் வரும் வாகனங்கள் பத்ரகாளியம்மன் கோவில் ரோடு, உடுமலை ரோடு வழியாக பஸ் ஸ்டாண்ட் செல்கிறது. அது போன்று, திருவள்ளுவர் திடல் வழியாகவும் வாகனங்கள் செல்ல போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் நாள் வெங்கட்ரமணன் வீதியிலிருந்து புறப்படும் தேர், சத்திரம் வீதியில் நிறுத்தம் செய்யப்படுகிறது. உடுமலை ரோட்டிலிருந்து பஸ்ஸ்டாண்டுக்கு வரும் வாகனங்கள் பல்லடம் ரோடு, நியூஸ்கீம் ரோடு வழியாக சென்றடையும்.மூன்றாம் நாள் சத்திரம் வீதியிலிருந்து கோவிலுக்கு தேர் சென்று நிலை நிறுத்தப்படும். சத்திரம் வீதியாக வரும் வாகனங்கள், பார்க் ரோடு வழியாக மாற்றம் செய்து போலீசார் அறிவித்துள்ளனர். மேலும், தேர் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகளில், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.