ஜனவரியில் தமிழகம் முழுவதும் பாத யாத்திரை – அண்ணாமலை திட்டம்..!

சென்னை: ஜனவரியில் தமிழகம் முழுதும் பாதயாத்திரை செல்ல, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை திட்டமிட்டு உள்ளார்.வெளிநாடுவாழ் பா.ஜ., நண்பர்கள் அமைப்பின் நிர்வாகி கூறியதாவது: ‘தமிழகத்தில், 70 ஆண்டுகளுக்கும் மேலாக வேரூன்றியுள்ள திராவிட கட்சிகளின் கட்டமைப்பை உடைத்து, அந்த இடத்திற்கு பா.ஜ.,வை கொண்டு வருவது எளிதான காரியம் அல்ல. ஆனால், மெல்ல மெல்ல தமிழகத்தில் பா.ஜ., வளர்ந்து வருகிறது’ என, அண்ணாமலை தெரிவித்தார். ‘இப்போது மீண்டும் மோடி ஆட்சி தான் என, சாதாரண மக்களும் கூறுகின்றனர். எனவே, தனித்தே நின்றாலும் பா.ஜ., கணிசமான இடங்களில் வெல்லும். இரட்டை இலக்கத்தில் ஓட்டு சதவீதமும் கிடைக்கும்’ என்று கூறிய அண்ணாமலை, இதற்காக வரும் ஜனவரியில், தமிழகம் முழுதும் பாதயாத்திரை செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார்.அடுத்த ஆண்டு முழுதும் சென்னையில் தங்காமல், தமிழகம் முழுதும் சென்று கட்சிப் பணிகளில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்தார். லோக்சபா தேர்தலுக்காக, 2023ம் ஆண்டு முழுதும் தீவிரமாக உழைக்க, அவர் தயாராகி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.