அப்பாடா!! சரிந்தது நூல் விலை… பின்னலாடை துறையினர் நிம்மதி..!!

திருப்பூர்: பருத்தி நுால் விலை கிலோவுக்கு, 20 ரூபாய் குறைந்துள்ளதால் பின்னலாடை வர்த்தகத்தில் புதிய ஆர்டர்களை வசப்படுத்த முடியுமென, ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.பருத்தி ‘சீசன்’ துவங்கியுள்ள நிலையில், கடந்த ஜூலை மாதத்தில் இருந்து, பருத்தி நுாலிழை விலை குறைந்து வருகிறது. கடந்த மாதம் கிலோவுக்கு, 40 ரூபாய் விலை குறைந்திருந்த நிலையில், இம்மாதம் மேலும், 20 ரூபாய் குறைந்துள்ளது. ‘கோம்ப்டு’ 20 ரகம் நுால் கிலோ, 272 ரூபாய், 24 ரகம், 282, 30 ரகம், 292, 34 ரகம், 305, 40 ரகம், 325 ரூபாய் என, இம்மாதம் விலை குறைந்துள்ளது. ‘செமி கோம்ப்டு’ 20 ரகம், 262 ரூபாய், 24 ரகம், 272, 30 ரகம், 282, 34 ரகம், 295, 40 ரகம், 315 ரூபாய் என,(வரி நீங்கலாக) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பின்னலாடை உற்பத்தியில் அதிகம் பயன்படுத்தும், 30ம் நம்பர் நுால் விலை, 130 ரூபாய் குறைந்துள்ளது.இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் கூறுகையில்,”நுால் விலை நிலையான இடத்துக்கு வந்துவிட்டது.இனி, தைரியமாக ஆர்டர்களை எதிர்கொள்ள முடியும். ஜெர்மனி, பிரிட்டன், ஐரோப்பா, அமெரிக்க நாடுகளில் இருந்து வர்த்தக விசாரணை துவங்கி விட்டது.

திருப்பூருக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்க அதிகம் வாய்ப்புள்ளது,” என்றார்.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியன் கூறுகையில்,”பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் சாதகமான சூழல் நிலவுகிறது. நுால் விலை குறைந்துள்ளதால், வியட்நாம், வங்கதேசம் போன்ற போட்டி நாடுகளை காட்டிலும், குறைந்த விலைக்கு ஆர்டர்களை ஒப்பந்தம் செய்ய முடியும். சர்வதேச சந்தைகளில் இருந்து, முன்னணி ‘பிராண்டு’ நிறுவனங்களிடம் இருந்து வர்த்தக விசாரணை வரத்துவங்கியுள்ளது. வரும் புத்தாண்டு உற்சாகமான ஆண்டாக அமையும்,” என்றார்.