கோவை சரவணம்பட்டி எல்.ஜி.பி நகரை சேர்ந்தவர் சுதாகர். இவருடைய மனைவி தீபிகா. கோவை சத்தி சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் வேலை பார்த்து வருகிறார். சுதாகர் நண்பர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் தனது குடும்பத்துடன் போத்தனூர் பகுதியில் தங்கியிருந்து மீன் வியாபாரம் செய்து வருகிறார். எல்.ஜி.பி நகருக்கு மீன் வியாபாரத்திற்கு வரும் ஜெயக்குமாருக்கும் தீபிகாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதை அடுத்து இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் இருந்தது. அப்பொழுது ஜெயக்குமாரிடம் இருந்து தீபிகா தனது தேவைக்காக ரூபாய் 40 ஆயிரம் வரை கடன் வாங்கியதாக தெரிகிறது. இந்த நிலையில் கொடுத்த பணத்தை ஜெயக்குமார் கேட்டுள்ளார். ஆனால் தீபிகா கொடுக்கவில்லை. இந்நிலையில் தீபிகா தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டு இருந்தார். அப்பொழுது நடுவழியில் அவரை வழிமறித்த ஜெயக்குமார் கொடுத்த பணத்தை திரும்பி தருமாறு கேட்டார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜெயக்குமார் மீன் வெட்டும் கத்தியால் தீபிகாவை சராமாரியாக குத்தியதாக தெரிகிறது. இதில் அவருக்கு கழுத்து, மார்பு கைப் பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணை கத்தியால் குத்திய ஜெயக்குமாரை கைது செய்தனர்.
Leave a Reply