வ.உ.சி உயிரியல் பூங்காவின் அங்கீகாரம் ரத்து-மறு உத்தரவு வரும் வரை மூட உத்தரவு ..!

கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவுக்கான அங்கீகாரம் ரத்து செய்து மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் உத்தரவிட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுதித்தியுள்ளது.

கோவையின் அடையாளங்களில் ஒன்றாக மாநகராட்சி வ.உ.சி. உயிரியல் பூங்கா உள்ளது. கடந்த 1965-ம் ஆண்டு இப்பூங்கா உருவாக்கப்பட்டது. இங்கு ஊர்வன, பறப்பன, பாலூட்டிகள் என 40 இனங்களில் 532 உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

வார நாட்களில் தினசரி 300 முதல் 350 பேரும், விடுமுறை நாட்களில் 1500 முதல் 2000 பேரும் வந்து செல்கின்றனர்.சுமார் 55 ஆண்டுகளுக்கு முன்னதாக உருவாக்கப்பட்ட பூங்கா என்பதால், பழைய கட்டமைப்பு வசதிகள் மட்டுமே உள்ளன.

இச்சூழலில், பூங்கா மற்றும் விலங்கினங்களின் பராமரிப்பு விவகாரத்தில் பல்வேறு குறைபாடுகள் காரணமாக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாறுபாடு துறையின் கீழ் செயல்படும் மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் கோவை மாநகராட்சி உயிரியல் பூங்காவுக்கான அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது.

இதுதொடர்பாக, கடந்த மாதம் 5-ம் தேதி மத்திய வனத்துறை (தலைமையிடம்) டிஐஜி அகஸ்கா மகாஜன் வெளியிட்ட உத்தரவில், ‘கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவுக்கான அங்கீகாரமானது வன உயிரின (பாதுகாப்பு) சட்டம் 1972-ன் கீழ் ரத்து செய்யப்படுகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், பூங்காவில் பராமரிக்கப்படும் விலங்கினங்களுக்கு வனத்தில் உள்ளது போல இயற்கை சார்ந்த சூழல் அளிக்கப்படவில்லை. உயிரியல் பூங்காவுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருப்பதில் குறைபாடுகள் உள்ளன என பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டிய ஆணையம், குறிப்பிட்ட சூழலில் உயிரியல் பூங்காவின் செயல்பாட்டைத் தொடர்வது மோசமான பாதிப்புகளை உருவாக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

வ.உ.சி. உயிரியல் பூங்காவுக்கான அங்கீகாரத்தை திரும்ப வழங்க மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்துக்கு மாநகராட்சி சார்பில் கடிதம் எழுதப்பட்ட நிலையிலும், அங்கீகாரத்தை திரும்ப வழங்க ஆணையம் மறுத்துவிட்டது.

இதையடுத்து, பூங்கா பராமரிப்பை தமிழக வனத்துறையின் கீழ் உள்ள உயிரியல் பூங்கா ஆணையம் மேற்கொள்ள கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ‘தமிழகத்தில் உயிரியல் பூங்கா மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் பராமரிப்பு செய்யப்படுவது கோவையில் மட்டுமே நடைமுறையில் உள்ளது. உயிரியல் பூங்காவை செயல்படுத்துவதும், அதனை பராமரிப்பதும் தொழில்நுட்பம் சார்ந்த விஷயம். உயிரியல் பூங்கா எவ்வாறு செயல்பட வேண்டும் என மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் வழிகாட்டுதல்களைத் தெரிவித்துள்ளது.

மாநகராட்சி வசம் அத்தகைய நிபுணத்துவத்துக்கான பற்றாக்குறை உள்ளது. மாநகராட்சி பணியாளர்களிடம் அதை எதிர்பார்க்க முடியாது. மேலும், உயிரியல் பூங்கா பராமரிப்பு குறித்து மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்துக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அனைத்தையும் ஆலோசித்த பிறகே, வ.உ.சி. உயிரியல் பூங்காவின் பராமரிப்பை வருவாய் பகிர்வு அடிப்படையில் ஏற்றுக் கொள்ள தமிழக உயிரியல் பூங்கா ஆணையத்துக்கு சில தினங்களுக்கு முன் கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி குழந்தைகள் பூங்கா, சேலம், திருச்சி, வேலூர் ஆகிய 5 இடங்களில் உயிரியல் பூங்காக்களை பராமரிக்கும் அனுபவம் அவர்களுக்கு உள்ளது’ என்றார்.

வனத்துறை வசம் பூங்கா பராமரிப்பு ஒப்படைக்கப்பட்டால், தமிழகத்தின் பிற நகரங்களில் உள்ளது போல, கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவும் புறநகர் பகுதிக்கு மாற்றப்படுமா என்ற கேள்வியும் சூழல் ஆர்வலர்கள் தரப்பில் எழுந்துள்ளது. ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, ‘பூங்காவை இடமாற்றம் செய்வதற்கு வாய்ப்பு குறைவு’ என்றனர்