சென்னை: குஜராத் முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் நேற்று அகமதாபாத் புறப்பட்டு சென்றார்.
அங்கு அவர் மோடி, அமித்ஷாவை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில், மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 156 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜ வரலாற்று சாதனை படைத்தது. இதையடுத்து புதிய பாஜ எம்எல்ஏ.,க்கள் கூட்டம் நடந்தது. அதில் பூபேந்திர படேலை மீண்டும் குஜராத் முதல்வராக்க ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் குஜராத் மாநிலத்தின் முதல்வராக பூபேந்திர படேல் இரண்டாவது முறையாக இன்று பொறுப்பேற்க உள்ளார். காந்திநகரில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். இந்நிலையில் குஜராத் முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை 5.55 மணியளவில் இண்டிகோ ஏர்லைன் பயணிகள் விமானத்தில் குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு புறபட்டு சென்றார்.
அகமதாபாத் சென்றுள்ள அவர் இன்று குஜராத் மாநில முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார். அங்கு பிரதமர் மோடி, அமித்ஷாவை ஓபிஎஸ் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேரம் கிடைக்கும் பட்சத்தில் அவர்களை சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே குஜராத் தேர்தல் வெற்றி தொடர்பாக பிரதமருக்கு ஓ.பன்னீர்செல்வம் எழுதிய கடிதத்தில்,’நம் கட்சிகளுக்கு இடையே நெருக்கமான உறவுகளை வளர்த்துக் கொள்வது மட்டுமின்றி, மக்கள் நலனுக்கான நம் முயற்சிகளை ஒருங்கிணைக்கவும், உங்களுடன் பணியாற்றுவதை எதிர்பார்க்கிறேன். எனது நட்பும், கட்சியின் ஆதரவும் தொடரும்’ என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply