இலங்கை அதிபர் தேர்தலில் இருந்து விலகினார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா .!!!

இலங்கை பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு பெரிய அளவில் மக்கள் போராட்டம் வெடித்தது. கடந்த 9ஆம் தேதி மக்கள் அதிபர் மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மக்கள் புரட்சியால் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்தார்.

அதற்கு முன்னதாக அவர் சிங்கப்பூருக்கு தப்பி சென்று விட்டார். எனவே இலங்கையின் இடைக்கால அதிபராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார்.நாட்டின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது.

இன்று வேட்புமனுக்கள் பெறப்படுகின்றன. ரணில் விக்ரமசிங்கே, இலங்கையின் பிரதான எதிர்க்கட்சித்தலைவரான சஜித் பிரேமதாசா, முன்னாள் அமைச்சர் டல்லஸ் அழகப்பெருமா, ஜேவிபி கட்சியின் தலைவர் அருணா திசநாயகா ஆகியோர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இலங்கை அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து இலங்கையின் பிரதான எதிர்க்கட்சித்தலைவரான சஜித் பிரேமதாசா விலகுவதாக அறிவித்துள்ளார். மக்கள் நலனுக்காக அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலகுவதாக சஜித் பிரேமதாசா அறிவித்துள்ளார். மேலும் தேர்தலில் முன்னாள் மந்திரி டல்லஸ் அழகப்பெருமாவுக்கு ஆதரவு தரவுள்ளதாகவும் கூறியுள்ளார்.