லாரியில் கடத்திய 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்- உரிமையாளர், டிரைவர் கைது..!

கோவை: தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல்துறை தலைமை இயக்குனர் அபாஷ் குமார் உத்தரவின்பேரில் கோயம்புத்தூர் சரக காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில் கோவை டி.எஸ்.பி கிருஷ்ணன் தலைமையில் பொள்ளாச்சி இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் சப் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் மற்றும் போலீஸ்காரர்கள் இன்று அதிகாலை 4 மணி முதல் கோவை – பாலக்காடு கேரளாவுக்கு செல்லும் அனைத்து வழித்தடங்களிலும் திடீர் வாகன சோதனை செய்தனர்.மதுக்கரை டோல் பிளாசா அருகில் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சந்தேகத்தின் பேரில் அந்த வழியாக வந்த 4சக்கர வாகனத்தை சோதனை செய்ய காவலர்களுக்கு உத்தரவிட்டார். அதில் 50 கிலோ எடை கொண்ட 100 வெள்ளை நிற சாக்கு மூட்டைகளில் சுமார் 5ஆயிரம் கிலோ பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. மேற்படி வாகன ஓட்டுனரான குனியமுத்தூரைச் சேர்ந்த வல்லரசு ( வயது 23) என்பவரை விசாரணை செய்ததில், கோவை குறிச்சி பகுதியை சேர்ந்த அரிசி உரிமையாளரான குறிச்சி செந்தில் என்பவரிடம் ஓட்டுனராக வேலை பார்ப்பதாகவும். ரேஷன் அரிசியை கடத்தி சென்று கேரள மாநிலத்தில் கள்ள சந்தையில் அதிக லாபத்திற்கு விற்பதையும் ஒப்புக்கொண்டார் . வாகன ஓட்டுநர் வல்லரசு மற்றும் அரிசி உரிமையாளர் குறிச்சி செந்தில் இருவரும் கைது செய்யப்பட்டனர். வாகனம் மற்றும் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.