அதிமுக பொதுக்குழு விவகாரம் தீர்ப்பு வரும் அதே நாளில்.. சசிகலாவிற்கு பொதுச்செயலாளர் வழக்கும் இன்று தான் விசாரணை..!

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதற்கு எதிராக சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று விசாரணை நடத்துகிறது.

அதிமுக பொது செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு கட்சியின் பொது செயலாளராக வி.கே.சசிகலா தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அதன்பின் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா ஏ1 குற்றவாளியாகவும், சசிகலா ஏ 2 குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டனர்.

இதையடுத்து சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். அவர் சிறைக்கு செல்லும் முன் அதிமுகவை வழி நடத்த வேண்டும் என்று டிடிவி தினகரனை கட்சியின் துணை பொதுச்செயலாளராக அறிவித்துவிட்டு சென்றார்.

இதையடுத்து நடந்து பல்வேறு மோதல்கள் மற்றும் கூட்டங்களை தொடர்ந்து 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி மீண்டும் அதிமுக பொதுக்குழு கூடியது. அந்த பொதுக்குழுவில் சசிகலா, டிடிவி தினகரன் இருவரும் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இவர்களின் பதவிகளும் பறிக்கப்பட்டது. அதன்பின் ஓபிஎஸ் – எடப்பாடி ஆகியோர் இணைப்பை தொடர்ந்து கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன.

பொதுக்குழு மூலம் உருவாக்கப்பட்ட இந்த பதவிகளை தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில் தன்னை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கிய அதிமுக பொதுக்குழு செல்லாது, என்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரியும், அதில் தங்களை நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரியும் சசிகலா சென்னை மாவட்ட 4வது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியது சட்டவிரோதம் எனவும் அறிவிக்க வேண்டுமென சசிகலா கூடுதல் மனு தாக்கல் செய்து இருந்தார். இதையடுத்து சசிகலா வழக்கை நிராகரிக்க கோரி பன்னீர் செல்வம், பழனிச்சாமி, அதிமுக நிர்வாகிகள் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணை செய்யாமலே நிராகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. சசிகலாவை கட்சியிலிருந்தே நீக்கம் செய்யப்பட்டதை உச்சநீதிமன்றமும், டெல்லி உயர்நீதிமன்றம், இந்திய தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொண்டது.

அதனால் அவரின் மனுவை ஏற்க கூடாது. சசிகலா தவறான தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக பன்னீர் செல்வம், பழனிச்சாமி மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது . அதில் ஓபிஎஸ், இபிஎஸ் மனுவை ஏற்ற நீதிமன்றம், சசிகலா மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர். என் மஞ்சுளா அமர்வு முன் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

முன்னர் ஓ பன்னீர்செல்வம் சசிகலாவிற்கு எதிராக இருந்ததால் அவருக்கு எதிராக கடும் வாதங்களை வழக்கில் வைத்தார். இந்த நிலையில் தற்போதும் அதே போல் வாதங்களை வைப்பாரா அல்லது சசிகலாவிற்கு எதிராக மனுக்களை வாபஸ் வாங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.