அட பாவமே… சீனா பொருளாதாரம்: 30 வருடத்தில் இல்லாத அளவு படு மோசமான நிலை ..!!

உலகின் உற்பத்தி இன்ஜினாக விளங்கும் சீனா 2022 ஆம் ஆண்டுத் துவக்கம் முதலே கொரோனா தொற்று மூலம் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வந்த காரணத்தால் இந்நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் எதிர்கொண்டு உள்ளது.

இதற்கிடையில் சீனாவின் ரியல் எஸ்டேட் துறை மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டு இருப்பது மட்டும் அல்லாமல் 50க்கும் அதிகமான சீன நகரங்களில் 100க்கும் அதிகமாக ரியல் எஸ்டேட் திட்டங்களில் வீடு வாங்கியவர்கள் வீட்டுக் கடனுக்கான ஈஎம்ஐ செலுத்த முடியாது என அறிவித்துள்ளனர். இதனால் சீனா முழுவதும் இருக்கும் வங்கிகள் மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொண்டு இன்று அவரச கூட்டத்தைச் சீன அரசு அதிகாரிகள் உடன் செய்துள்ளது.

இதற்கிடையில் தான் சீன பொருளாதாரத்தின் தற்போதைய நிலவரம் வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்றுக் காரணமாக ஷாங்காங், ஷென்சென், பெய்ஜிங் உட்படப் பல முக்கிய வர்த்தக நகரங்கள் மாகாணங்களில் கடுமையான லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. இதனால் சீனா-வின் உற்பத்தி மிகப்பெரிய அளவிலான சரிவைச் சந்தித்து மட்டும் அல்லாமல் உலக நாடுகளின் சப்ளை செயின் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டது.

ஆனால் சீன அரசு தொடர்ந்து தனது பொருளாதாரம் ஸ்திரத்தன்மை உடன் இருப்பதாகக் கூறி வருகிறது. சீனா அரசு தரவுகள் இன்று வெளியாகியுள்ளது, இதில் சீனாவின் மார்ச் காலாண்டு பொருளாதார வளர்ச்சி அளவீட்டில் இருந்து 1.4 சதவீதம் சரிந்து ஜூன் காலாண்டில் 2.6 சதவீதமாக இருந்துள்ளது.

கொரோனா வைரஸ் எதிர்ப்புக் கட்டுப்பாடுகள் காரணமாக மார்ச் மாத இறுதியில் துவங்கி ஜூன் காலாண்டில் அதிகப்படியான காலம் உலகின் பரபரப்பான துறைமுகத் தளமான ஷாங்காய் மற்றும் பிற உற்பத்தி மையங்கள் முடங்கியது. இதன் வாயிலாகவே உலகளாவிய வர்த்தகம் மற்றும் உற்பத்தி அளவுகள் பாதிக்கப்பட்டது.

தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்கள் மே மாதத்தில் தான் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டன, ஆனால் செயல்பாடு இயல்பு நிலைக்குத் திரும்பப் பல வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகும் என்று பொருளாதார வல்லுநர்கள் ஏற்கனவே கூறியுள்ள நிலையில் உலக நாடுகளின் சப்ளை செயின் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது.

சீனா பொருளாதாரம் முதல் பாதியில் வெறும் 2.5 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 30 வருடத்தில் இல்லாத மோசமான நிலையை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது. இக்காலகட்டத்தில் சீன நுகர்வோர் சந்தை மிகப்பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டது.