ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் அதிவேகமாக பைக் ஓட்டும் வாகன ஓட்டிகளால் விபத்து ஏற்படும் அபாயம்- போலீசார் எச்சரிக்கை..!

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்காக சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த சாலை வழியாக வாகனங்களை இயக்க இட வசதி உள்ள போதும் ரவுண்டானா பகுதியில் நடை பயிற்சிக்காக அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் வாலிபர்கள் பலர் மோட்டார் சைக்கிளை அதிவேகத்தில் அதிக சத்தம் கொண்ட சைலன்ஸர்களைக் கொண்டு வாகனங்களை இயக்கி வருகின்றனர். இதனால் ரேஸ்கோர்ஸ் ரவுண்டானா பகுதியில் சாரதாம்பாள் கோவில் முன்பு தொடங்கி தனியார் கிளப் நுழைவாயில் வரை உள்ள நடைபாதையில் இந்த விதிமீறல் அதிகம் காணப்படுகிறது. நடை பயிற்சி செல்லும் முதியவர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்து வயதினரும் விதி மீறி அதிவேகத்தில் வாகனங்களை ஒட்டி செல்லும் நபர்களால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன் போக்குவரத்து போலீசார் விதிமீறி அதிவேகத்தில் ரேஸ்கோர்ஸ் ரவுண்டான நடை பாதையில் மோட்டார் சைக்கிளை இயக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது கறித்து போலீஸ் துணை கமிஷனர், மதிவாணன் கூறும்போது நடைபாதை என்பது பொதுமக்கள் நடந்து செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள இடம். அந்த இடத்தில் விதி மீறி அதிவேகத்தில் வாகனங்களை இயக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.