திருமணமான 22 நாளில் 80 சவரன் நகையுடன் புது மணப்பெண் எங்கோ மாயம்..!

சென்னை மேற்கு தாம்பரம் மாந்தோப்பு கிணற்று தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (27). இவர், சென்னையில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கும், காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே உள்ள சென்னக்குப்பம் பகுதியை சேர்ந்த ஊராட்சி கவுன்சிலர் ராஜேந்திரன் என்பவரது மகள் ஆர்த்தி (22) என்பவருக்கும் கடந்த மாதம் 11-ம் தேதி பல்லாவரத்தில் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின்போது பெண்ணுக்கு அவரது பெற்றோர் 80 சவரன் நகை போட்டதாக கூறப்படுகிறது. திருமணம் ஆகும்போதே ஆர்த்தி, சேலையூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் எம்.காம் படித்து வந்தார். கல்லூரியில் முதலாம் ஆண்டு கட்டணம் செலுத்தாததால் கடிதம் எழுதி கேட்டிருக்கிறார்கள். எனவே கல்லூரிக்கு சென்று கடிதம் எழுதி கொடுத்துவிட்டு வருவதாக கணவர் விக்னேஷிடம் கூறிவிட்டு கடந்த 3-ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்ற ஆர்த்தி அதன்பிறகு வீடு திரும்பி வரவில்லை.

நீண்ட நேரமாகியும் அவர் வராததால் கல்லூரியில் போய் தேடினர். அங்கு அவர் இல்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விக்னேஷ், வீட்டுக்கு வந்து பார்த்தபோது 80 சவரன் நகையுடன் ஆர்த்தி மாயமாகி இருப்பது தெரிந்து மேலும் அதிர்ச்சி அடைந்தார்.

இது தொடர்பாக விக்னேஷ் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் தாம்பரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மாயமான புதுமணப்பெண்ணை தேடி வருகிறார்கள். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் திருமணத்துக்கு முன்பே ஆர்த்தி, ஒரகடம் அருகே உள்ள சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்ற வாலிபரை காதலித்து வந்தது தெரிய வந்தது.

சேந்தமங்கலம் பகுதியில் தாம்பரம் போலீசார் விசாரணை நடத்திய போது ஆகாஷின் வீடு பூட்டி கிடந்தது. அவருடைய பெற்றோர் உட்பட அனைவரும் தலைமறைவாகி இருந்தனர். ஆகாஷின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. எனவே ஆர்த்தியை, ஆகாஷ் அழைத்து சென்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இருவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.