கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் அலெக்சாந்தர் (வயது 35). இவர் கணபதியில் பார்சல் சர்வீஸ் வைத்து நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று ஜார்ஜ் அலெக்சாந்தர் வழக்கம் போல வேலைக்கு சென்றார். அப்போது 3 வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் ஜார்ஜ் அலெக்சாந்தரிடம் பணம் கேட்டனர். அதற்கு அவர் பணம் தர மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டினர். அதிர்ச்சி அடைந்த ஜார்ஜ் அலெக்சாந்தர் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் அந்த 3 வாலிபர்களையும் மடக்கி பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது அந்த வாலிபர்கள் அவர்களையும் கத்தியை காட்டி மிரட்டி தப்பி சென்றனர். இதுகுறித்து ஜார்ஜ் அலெக்சாந்தர் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புதுகோட்டையை சேர்ந்தவர் பாலாஜி (27). இவர் கோவை கணபதியில் சாலையோரம் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று இயற்கை உபாதைக்காக அருகில் சென்றார்.
அப்போது அங்கு பதுங்கி இரந்த 2 பேர் அவரிடம் வழிப்பறி செய்ய முயற்சி செய்தனர். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்து தப்பி சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதேபோன்று புதுகோட்டையை சேர்ந்தவர் ராஜா (31). இவர் கோவை சத்தி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் காசாளராக வேலை செய்து வருகிறார். அவர் வேலை செய்யும் டாஸ்மாக் கடைக்கு 7 பேர் கொண்ட கும்பல் மதுகுடிக்க வருவது வழக்கம். சம்பவத்தன்று அந்த கும்பல் ராஜாவிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்தனர். அவர்களிடம் இருந்து தப்பிய ராஜா சரவணம்பட்டி போலீசில் புகார் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் 3 பேர் அளித்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜார்ஜ் அலெக்சாந்தரிடம் கத்தியை காட்டி மிரட்டி பண பறிக்க முயற்சி செய்தது கணபதி பகவத் சிங் வீதியை சேர்ந்த ஹரி பிரபு (19) மற்றும் அவரது நண்பர்கள் விக்கி, குணா என்பது தெரியவந்தது.
பாலாஜிடம் பணம் பறிக்க முயற்சி செய்தது கணபதி மோர் மார்க்கெட்டை சேர்ந்த குப்புராஜ் (44) மற்றும் தனபால் (25) என்பது தெரியவந்தது. இதல் போலீசார் ஹரி பிரபு மற்றும் குப்புராஜ் தனபாலை கைது செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதேபோன்று ராஜாவிடம் பணம் பறிக்க முயற்சி செய்தது நவின்குமார், தோனி, பரத், கார்த்திக், மாத்திவ், சிரஞ்ஜீவி, பிரசாந் என்பது தெரியவந்தது. போலீசார் அவர்களையும் விக்கி, குணா ஆகியோரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.
Leave a Reply