ஹவுதி படையினரின் ஏவுகணை தாக்குதலை முறியடிக்க 5 போர் கப்பல், 1 போர் விமானம் நிலைநிறுத்தம்…

புதுடெல்லி: செங்கடலில் ஹவுதி படையினர் அட்டூழியம் அதிகரித்து வருவதால் இந்திய எல்லை கடற்பகுதியில் 5 போர்க் கப்பல், 1 போர் விமானம் ஆகியவற்றை நிலை நிறுத்தி கடற்பகுதி கண்காணிப்பை இந்திய கடற்படை தீவிரப்படுத்தி உள்ளது. கடந்த 2 மாதங்களாக இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அரபிக் கடலில் எம்.வி. செம் புளூட்டோ என்ற வணிக கப்பல் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. சவுதி அரேபியாவில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு மங்களூருவுக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது, எம்.வி. செம் புளூட்டோ வணிக கப்பல் மீது ஆளில்லா ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் காரணமாக, கப்பலில் இருந்து வெடிபொருட்கள் வெடித்து சிதறி தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. ஆனால், இந்த தாக்குதலில் எந்த விதமான உயிரிழப்பு ஏற்படவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய கடற்படை போர்க்கப்பல்களான ஐஎன்எஸ் மோர்முகவோ, ஐஎன்எஸ் கொச்சி, ஐஎன்எஸ் கொல்கத்தா ஆகிய போர்க்கப்பல்களை அரபிக்கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. செங்கடல் வழியாக செல்லும் சர்வதேச வர்த்தக கப்பல்கள் மீது ஈரான் ஆதரவு ஹவுதி படையினர் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். கடந்த சில வாரங்களில் மட்டும் 20க்கும் மேற்பட்ட கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். நேற்று செங்கடல் பகுதியில் சென்ற வணிக கப்பலை குறிவைத்து 2 ஏவுகணைகளை ஹவுதி படையினர் வீசிய நிலையில், அதனை இடைமறித்து அமெரிக்க கடற்படை அழித்தது. மேலும் ஹவுதி படையினரையும் சுட்டுக் கொன்றது. இந்நிலையில் வெளிநாடு மற்றும் இந்தியா நோக்கி வரும் சரக்கு கப்பல்களின் பாதுகாப்பை அதிகரிக்கவும், கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்தவும் இந்திய கடற்படை துரித நடவடிக்கையை எடுத்துள்ளது.

அதன்படி இந்தியப் பெருங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில், ஐந்து போர்க் கப்பல்கள் மற்றும் ஒரு போர் விமானம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. ட்ரோன்கள், ஹெலிகாப்டர்கள் தாக்குதலை முறியடிக்கும் வகையில் கடல் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக அரபிக்கடலில் மால்டா நாட்டு சரக்கு கப்பல் மற்றும் லைபீரியா நாட்டு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. புதிதாக பயன்படுத்தப்பட்ட பி-8I, நீண்ட தூர கடல்சார் ரோந்து விமானம் மற்றும் தொலைதூர பைலட் விமானங்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளதால், ஒட்டுமொத்த கடல்சார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த உதவும் என்றும், பொருளாதார மண்டலத்தின் கண்காணிப்பை உறுதி செய்ய முடியும் என்றும் இந்திய கடற்படை கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.