அட தூள்… கமலா ஹாரிஸ் ஜெயிக்கணும்… பூர்வீக கிராமம் துளசேந்திரபுரத்தில் சிறப்பு வழிபாடு..!!

சென்னை: அமெரிக்கா அதிபர் தேர்தலில், கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டும் என அவரது பூர்வீக ஊரான, தமிழகத்தில் உள்ள துளசேந்திரபுரத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.அமெரிக்கா அதிபர் தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது. இன்று (நவ.,05) ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் களம் இறங்கி உள்ளார். ஆப்ரிக்க தந்தைக்கும், இந்திய தாய்க்கும் பிறந்தவர் கமலா ஹாரிஸ்.
கலிபோர்னியாவில் பிறந்த அவர், வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். கடந்த 2016ல் செனட் சபையின் எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2020ல் அதிபர் தேர்தலின் போது, ஜோ பைடன், துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிசை அறிவித்தார். கமலா ஹாரிசின் தாய்வழி தாத்தா பி.வி.கோபாலன் தென்னிந்தியாவின் தமிழகத்தில் உள்ள துளசேந்திரபுரத்தில் பிறந்தார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே துளசேந்திரபுரம் என்ற கிராமத்தில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிசுக்கு, அப்பகுதி கிராம மக்கள் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். ‘மண்ணின் மகள்’ வாஷிங்டனில் இருந்து 13 ஆயிரம் கி.மீ தொலைவில் உள்ள துளசேந்திரபுரத்தில் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோவிலில் ஹாரிசின் பெயர் ஒரு கல்லில் பொறிக்கப் பட்டுள்ளது. அதில் அவரது தாத்தாவின் பெயர் நன்கொடை கொடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. கோவிலுக்கு வெளியே கிராம மக்கள் வைத்துள்ள ஒரு பெரிய பேனரில், ‘மண்ணின் மகள்’ தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கமலா ஹாரிஸ் அதிபரானால், அமெரிக்காவின் முதல் கருப்பின பெண் அதிபர் என்ற பெயர் கிடைக்கும்.