கோவை உக்கடம் மீன் விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு..!

கோவை உக்கடம் லாரி பேட்டை மொத்த மீன் விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு உக்கடம் லாரி பேட்டை பகுதியில் உள்ள மொத்த மீன் மார்க்கெட்டில் விற்கப்பட்ட மீனில் ரசாயன வாசம் வருவதாக வடவள்ளி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒருவர் உணவு பாதுகாப்பு அலுவலகத்திற்கு வாட்ஸ் அப் மூலம் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறை கோவை மாவட்ட நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் வழிகாட்டுதலின்படி உக்கடம் லாரி பேட்டை மொத்த மீன் விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மூன்று குழுக்களாக பிரிந்து 15 கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். ஃபார்மாலின் ரசாயன பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டதில் ரசாயன பொருட்கள் சேர்க்க படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் இரண்டு கடைகளில் கெட்டுப் போன நிலையில் இருந்த சுமார் 26 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. இந்தக் கடைகளுக்கு உணவு பாதுகாப்பு சட்டம் 2006 பிரிவு 55 கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற திடீர் கள ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.