பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் சொத்துவரி குறைவு தான்-தமிழக அரசு விளக்கம்.!!

அடித்தட்டு மக்கள் அதிகம் பாதிக்கப்படாத வகையில் சொத்துவரி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு, பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் சொத்துவரி குறைவு எனவும் விளக்கமளித்துள்ளது.

சொத்து வரி உயர்வால் அடித்தட்டு மக்கள் அதிகம் பாதிக்கப்படாத வகையில் குடியிருப்புகளின் பரப்பளவை 4 வகைகளாக பிரித்து வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் 1,200 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவுள்ள வீடுகளில் வசிப்பதால், இந்த வரி உயர்வு பெருமளவு பாதிப்பை ஏற்படாது என அரசு தெரிவித்துள்ளது. அதாவது, கோவை மாநகராட்சியில் 600 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்புக்கான சொத்துவரி 204 ரூபாயாக உள்ள நிலையில், சீராய்வுக்குப்பிறகு அது 255 ரூபாய் ஆக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சொத்துவரி உயர்த்தப்பட்ட பின்பும் அது இந்தியாவின் பல மாநகரங்கள் மற்றும் நகரங்களுடன் ஒப்பிடுகையில் குறைவு எனவும் மாநில அரசு தெரிவித்துள்ளது.

உதாரணமாக சென்னை மாநகராட்சியில் 600 சதுர அடி குடியிருப்புக்கு குறைந்தபட்ச சொத்துவரியாக ஆயிரத்து 215 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே பரப்பளவுள்ள குடியிருப்புக்கு, மும்பையில் 2,157 ரூபாயும், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 3,464 ரூபாயும், கொல்கத்தாவில் 3,510 ருபாயும் வசூலிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புதிதாக வரையறை செய்யப்பட்டுள்ள சொத்துவரிக்கான சீராய்வு, 2022-23ஆம் ஆண்டின் முதலாம் அரையாண்டு முதல் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.