இனி கோவை மக்கள் ஏறலாம்… இறங்கலாம்… அவிநாசி ரோடு மேம்பாலத்தில்… ஏறுதள கட்டுமானம் பணி துவக்கம்.!!

கோவை : கோவை – அவிநாசி ரோட்டில், 10.1 கி.மீ., துாரத்துக்கு கட்டும் மேம்பாலத்தில், ‘சிட்ரா’ அருகில், ஏறு தளம் அமைக்கும் பணியை, நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் முருகேசன் நேற்று துவக்கி வைத்தார்,கோவை, உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, ரூ.1,620 கோடியில், மேம்பாலம் கட்டும் பணியை, மாநில நெடுஞ்சாலைத்துறை (திட்டம்) மேற்கொள்கிறது. இப்பாலம், 10.10 கி.மீ., நீளம், 17.25 மீட்டர் அகலத்தில் நான்கு வழிப்பாதையாக அமைகிறது.10.50 மீட்டர் அகலத்தில் இருபுறமும் சேவை சாலை, 1.50 மீட்டர் அகலத்தில் கழிவு நீர் கால்வாயுடன் நடைபாதை அமைக்கப்படும். மொத்தம், 306 இடங்களில் துளையிட்டு துாண்கள் அமைக்க வேண்டும்; இதுவரை, 260 துாண்கள் அமைக்கப்பட்டுள்ளன.இப்பணிகளை, மாநில நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் (திட்டங்கள்) முருகேசன் நேற்று ஆய்வு செய்தார். பின், விமான நிலையத்தில் இருந்து வரும் வாகனங்கள் பாலத்தில் பயணிப்பதற்கு வசதியாக, ஏறு தளம் அமைக்க திட்டமிட்டுள்ள இடத்தில், பணியை துவக்கி வைத்தார்.ஏறுதளம், இறங்கு தளம் அமைக்க தேவையான நிலம் கையகப்படுத்தி, பணிகளை விரைவுபடுத்தவும், தரமாக மேற்கொள்ளவும் தலைமை பொறியாளர் அறிவுறுத்தினார். ஏனெனில், நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, 7 பேர் வழக்கு தொடர்ந்திருக்கின்றனர். நெடுஞ்சாலைத்துறை தரப்பில் கோர்ட்டில் வாதங்கள் எடுத்துரைக்கப்பட்டு, இரு வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன.மீதமுள்ள வழக்குகள் மீதான விசாரணை நடந்து வருகிறது. வழக்குகளை விரைந்து முடித்து, ஏறுதளம், இறங்கு தளம் அமைக்கும் பணியை மேற்கொள்ள உத்தரவிட்டார்.ஆய்வின்போது, கண்காணிப்பு பொறியாளர் சரவணன், கோட்ட பொறியாளர் நபீஷா பீவி, உதவி கோட்ட பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் உடனிருந்தனர்.எங்கெங்கு அமைகிறதுஏறுதளம், இறங்குதளம்ஏர்போர்ட் சந்திப்பு, ஹோப் காலேஜ் சந்திப்பு, நவ இந்தியா சந்திப்பு, அண்ணா சிலை சந்திப்பு அருகே ஏறுதளம்/ இறங்கு தளங்கள் அமைக்கப்படும். மூன்று இடங்களில் சிறுபாலங்கள் புதுப்பிக்கப்படும்; மூன்று இடங்களில் சிறு பாலங்கள் அகலப்படுத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.