அரசு பெண்கள் உயர்நிலை பள்ளிக்குள் குடிபோதையில் மதில் சுவர் மீது ஏறி குதித்து நுழைந்த வடமாநில வாலிபருக்கு தர்ம அடி..!

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் ரங்கம்மாள் காலனியில் அரசு பெண்கள் உயர்நிலை பள்ளி உள்ளது. 6 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர்.

பள்ளியின் பின்புறம் கழிப்பிடம் உள்ளது. இதனை யொட்டி இடிகரை செல்லும் சாலையும் உள்ளது. நேற்று மாலை இடிந்த மதில் சுவர் மீது ஏறிய வாலிபர் ஒருவர் உள்ளே குதித்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சத்தம் கேட்டு அந்த வழியே சென்ற பொதுமக்கள் பள்ளிக்கூடத்திற்குள் புகுந்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிததனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் வாலிபரை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் பீகாரை சேர்ந்த சர்வன் குமார் (20) என்பதும், கோவை கலெக்டர் காலனி பகுதியில் வசிப்பதும் தெரிய வந்தது. அவர் குடிபோதையில் இருந்ததால் விசாரிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இது குறித்து பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது ‘பள்ளியில் ஒரு சில இடங்களில் காம்பவுண்டு சுவர் இடிந்து கிடக்கின்றது. அனைத்து பகுதிகளுக்கும் சுவர் எழுப்பி மாணவிகளின் பாதுகாப்பை பள்ளி நிர்வாகம் உறுதிபடுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.