பிற மொழியை திணிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை- கோவையில் கனிமொழி எம்.பி. பேட்டி..!

கோவை குனியமுத்தூரில் உள்ள கல்லூரியில் இளைஞர் தலைமை பண்பு உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் தலைமை விருந்தினராக தி.மு.க. துணை பொது செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி கலந்து கொண்டார். அவர் தலைமை பண்பு குறித்து மாணவர்களிடம் பேசினார். சத்துணவு திட்டத்தை முதலில் தொடங்கிய மாநிலம் தமிழ்நாடு. அதே போன்று தான் காலை உணவு திட்டத்தையும் இந்திய அளவில் தமிழ்நாடு தொடங்கி வைத்துள்ளது. இந்திய அளவில் ஐ.டி.சி பாலிசியை உருவாக்கியவர் கலைஞர் கருணாநிதி. மிகச்சிறந்த தலைவர்கள் மக்களை படிக்கக்கூடியவர்கள். தந்தை பெரியார், அண்ணா ஆகியோரை இணைத்து கருத்துகளை தெரிவிக்கும் தலைவராக கலைஞர் இருந்துள்ளார்.
தமிழ்நாட்டில் இன்று அறிவியல் பூர்வமாக நல்ல கம்யூனிகேஷன் தொடர்பு உள்ளதற்கு காரணம் மேலே குறிப்பிட்ட 3 தலைவர்கள் தான். கம்யூனிகேசன் என்பது வளர்ந்து வருவதுடன் மாறி கொண்டே செல்கிறது. அதனால் தான் அரசியலில் தவறுகள் ஏதும் நடைபெற்றால், அது தொழில் நுட்பத்தால் வைரல் ஆகிறது. தொழில் நுட்பம் இளைஞர், இளம் பெண்களின் உலகமாக உள்ளது. பருவக் காலம் மாற்றம் குறித்து சிறுமி ஒருவர் பேசியது உலக அளவில் பேசப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் தகவல் தொழில்நுட்பம் தான். தகவல் தொழில்நுட்பம் நமக்கு கிடைத்த அரிய வாய்ப்பு. அதை நாம் எப்படி பயன்படுத்த போகிறோம் என்பதை சிந்திக்க வேண்டும். உலகம் இன்று இளைஞர்கள் சமுதாயமாக உள்ளது.
வீட்டை விட்டு பெண்கள் வெளியே போககூடாது. ஆண்கள் வெளிநாடு போக கூடாது என பொய்யான, போலியான பாதுகாப்பை உருவாக்கி வைத்துள்ளார்கள். பெண்கள் போலியான பாதுகாப்பில் இருந்து வெளியே வர வேண்டும். நாம் கம்யூனிகேஷனில் எந்த இடத்தில் இருக்கோம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ் உணர்வு அனைவருக்கும் உள்ளது. தமிழகத்தில் ஒரு சிலர் தமிழ் உணர்வு இல்லை என்றார்கள். இங்கு நான் தமிழில் தான் பேசுகிறேன். இங்கு இருக்கிற இளைஞர் கூட்டம் தான் மெரினாவில் போராட்டம் நடத்தி சாதனை படைத்தனர். தமிழ் என்பது கம்யூனிகேசன் மொழி மட்டுமல்ல. தமிழ் நமது அடையாளம். நம்முடைய அடையாளம் நம் மொழி, பண்பாடு, கலாச்சாரம். நாம் இன்னும் தமிழ் பேசுகிறோம். தமிழ் உணர்வோடு இருக்கிறோம். நம்மிடம் பேச நினைப்பவர்கள் அதை புரிந்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்மொழி என்பது நமது அடையாளம். பிற மொழியை திணிக்க கூடிய உரிமை யாருக்கும் இல்லை. மீண்டும் மொழி போர் வரக்கூடாது என்பது முதல்வர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. எனவே அந்த நிலையானது மீண்டும் வரக்கூடாது. பெரியார் சொன்னது போல உலகுடன் பேச ஆங்கிலம் தேவை. நாட்டில் பேசுவதற்கு தாய்மொழி தான் தேவை. தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் தமிழ் மொழி கட்டாயமாக உள்ளது. தமிழிசை சவுந்திரராஜன் ஆடை கட்டுபாடு குறித்து பேசியது தொடர்டான கேள்விக்கு, பெரியார் கூறியது போல ஆடையும், அலங்காரமும் பெண்ணின் தனிப்பட்ட உரிமை. அதனை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. அதை நாங்கள் தான் தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.