தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க இன்று டெல்லி புறப்பட்டு சென்றார்.
கிருஷ்ணகிரி மாவட்ட இராணுவ வீரர் பிரபு திமுக கவுன்சிலரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிராக சென்னையில் நேற்று தமிழக பாஜக சார்பில் போராட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து தமிழக ஆளுநர் ரவியை சந்தித்த அண்ணாமலை தலைமையிலான குழுவினர் தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து புகார் மனு அளித்தனர்.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட பலர் மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லி சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனியார் தொலைக்காட்சி ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். அப்பொழுது பேசிய அவர் “எஃப்.ஐ.ஆரை கண்டு பாஜகவில் யாரும் பயப்பட மாட்டார்கள். எப்.ஐ.ஆர் பதிவு செய்வதன் மூலம் ராணுவ வீரர் கொலை செய்யப்பட்டதை மூடி மறைக்கலாம் என்று திமுக அரசு நினைக்கிறது.
வெறும் எப்.ஐ.ஆர்.க்கு யாரும் பயப்படப் போவதில்லை. ஏனென்றால், இந்த வழக்கில் நாங்கள் விரும்பியதெல்லாம் முதல்வர் தனது கட்சி நிர்வாகி செய்த செயலுக்கு ராணுவ வீரரின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் ராணுவ வீரரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் போதுமான இழப்பீடு வழங்க வேண்டும்.
பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்வது என்பது எங்களுக்கு முதல் முறை அல்ல. பாஜக தமிழகத்தில் உள்ள சாமானியர்களுக்காக போராட்டம் நடத்தும் போதெல்லாம் எப்ஐஆர் பதிவு செய்வது அடிக்கடி நடந்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின் கண் திறக்கும் வரையிலும் தன்னைச் சுற்றி நடக்கும் உண்மைகளை உணர்ந்து விழித்துக் கொள்ளும் வரையிலும் எங்களது போராட்டங்களை தீவிரப்படுத்துவோம்.
இது ஆரம்பம் மட்டுமே. தமிழக வரலாற்றில் முதன்முறையாக நடந்த மெழுகுவர்த்தி ஊர்வலத்தில் நேற்று ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நடைபயணத்தில் பிரிகேடியர், கர்னல் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் உள்ள நூற்றுக்கணக்கான முன்னாள் ராணுவத்தினர் வந்து பங்கேற்றது ஆரம்பம் மட்டுமே.
திமுக அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டது தெரிய ஆரம்பித்துள்ளது. இது ஒரு குடும்ப ஆட்சியாக மாறியுள்ளது. மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு உதவுவதும் இல்லை, தமிழகம் அதன் திறனை உணர்ந்து கொண்டிருக்கிறது. மெழுகுவர்த்தி ஊர்வலத்திற்கு பாஜக அனுமதி பெறவில்லை என தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அணிவகுப்பில் பல்வேறு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அனுமதி வாங்காமல், 500-1000 போலீஸ்காரர்களைக் கொண்டு பாதுகாப்பு கொடுப்பார்களா? நாள் முழுக்க உண்ணாவிரதப் போராட்டம் நடந்ததற்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்தார்கள்.
எப்.ஐ.ஆர் பதிவு செய்யும் காவல்துறைக்கு பின்னால் முதல்வர் ஸ்டாலின் ஒளிந்து கொள்ள முடியாது. என் மீது 83 வழக்குகள் உள்ளன, இது 84 வது வழக்கு. அவர்கள் வெவ்வேறு சாக்குப்போக்குகளில் பதிவு செய்கிறார்கள்” என முதல்வர் மு.க ஸ்டாலினை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்தார்.
Leave a Reply