கோவை கார் வெடிப்பு வழக்கை விசாரிக்கும் என்.ஐ.ஏ. அதிகாரி வந்தனா தமிழக பெண்- அமெரிக்காவில் சிறப்பு பயிற்சி பெற்றவர்..!!

கோவை கார் வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ விசாரித்து வருகிறது. இந்த வழக்கை விசாரிக்க டி.ஐ.ஜி. வந்தனா, எஸ்.பி. ஸ்ரீஜித் ஆகியோர் தலைமையிலான குழுவினர் கோவை வந்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் இந்த வழக்கு விசாரணை ஆவணங்கள், கைப்பற்றப்பட்ட தடயங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் ஒப்படைக்கப்பட்டன.

டி.ஐ.ஜி. வந்தனா ஐ.பி.எஸ். தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் கடந்த 2004 – ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரி ஆனார்.

பயிற்சிக்கு பின்னர் ராஜஸ்தான் மாநில கேடர் இவருக்கு ஒதுக்கப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் பயிற்சி எஸ். பி.யாக தனது பணியை தொடங்கினார். அங்கு பல் வேறு மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி உள்ளார். மேலும் சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை பிரிவில் அதிகாரியாக பணியாற்றி உள்ளார்.

தற்போது என்.ஐ.ஏ.வில் தென் மாநிலங்களுக்கான பிரிவில் டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வருகிறார். இவர் அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள அமெரிக்கன் இன்டெலிஜென்ஸ் டிரெய்னிங் அகாடமியில் பயங்கரவாத செயல்களை கட்டுப்படுத்துவது தொடர்பான சிறப்பு பயிற்சி பெற்றுள்ளார். இது மிகவும் கடினமான பயிற்சியாகும். இவர் விசாரித்த வழக்குகளில் மிகவும் முக்கியமானது கேரள மாநிலத்தில் நடந்த தங்க கடத்தல் வழக்கு ஆகும்.
மேலும் பெங்களூரு, ஐதராபாத்தில் நடந்த வெடிகுண்டு வழக்குகளை விசாரித்த அனுபவமும் இவருக்கு உள்ளது.

இந்த வழக்கை விசாரிக்கும் கொச்சி என்.ஐ.ஏ.வில் சூப்பிரண்டாக உள்ள ஸ்ரீஜித் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர். அசாம் மாநில கேடர் ஐ.பி.எஸ். அதிகாரியான இவரும் அடிப்படைவாத
அமைப்பு தொடர்பான வழக்குகளை சிறப்பாக கையாண்ட அனுபவம் பெற்றவர். திருப்புவனம் ராமலிங்கம் படுகொலை வழக்கை இவரது தலைமையிலான குழு விசாரித்தது குறிப்பிடத்தக்கது.