காங்கிரஸ் கட்சியின் மாற்றியமைக்கப்பட்ட செயற்குழுவில் பிரியங்காவுக்கு புதிய பொறுப்பு..!

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் மாற்றி அமைக்கப்பட்ட செயற்குழுவில் (சிடபிள்யூசி) பிரியங்கா காந்தி இடம்பெற்றுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் அங்கமான செயற்குழு முக்கிய விவகாரங்களில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மிக்கது. அக்கட்சியின் புதிய தலைவராக 2022 அக்டோபரில் மல்லிகார்ஜுன கார்கே பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக செயற்குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய செயற்குழுவில், மல்லிகார்ஜுன கார்கே, சோனியாகாந்தி, ராகுல் காந்தி, மன்மோகன்சிங் உள்ளிட்ட தலைவர்களுடன் பிரியங்கா காந்தி வதேராவும் இடம்பெற்றுள்ளார். இதையடுத்து அவர் உத்தர பிரதேச காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஏ.கே.அந்தோனி, அம்பிகா சோனி, திக்விஜய் சிங், அஜய் மாக்கன், ப.சிதம்பரம் ஆகியோரும் புதிய செயற்குழுவில் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.

தீபா தாஸ் முன்ஷி, சையத் நஸீர் ஹுசைன், ஆனந்த் சர்மா, முகுல் வாஸ்னிக், சரண்ஜித் சிங் சன்னி உள்ளிட்ட புதிய முகங்களுக்கும் செயற்குழுவில் வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளது. சோனியாவின் தலைமைக்கு எதிராக விமர்சனங்களை எழுப்பிய சசி தரூர், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலட்டுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் சச்சின் பைலட் ஆகியோரும் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.