ஊழல் வழக்கில் புதுடில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று கைதாக வாய்ப்பு..!

புதுடில்லி: மதுபான கொள்கை மற்றும் அதை நடைமுறைப்படுத்தியதில் நடந்த ஊழல் தொடர்பாக விசாரிக்க, புதுடில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை இன்று(அக்.,17) விசாரணைக்கு ஆஜராகும்படி, சி.பி.ஐ., ‘சம்மன்’ அனுப்பி உள்ளது. இதையடுத்து, அவர் இன்று கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. லஞ்ச குற்றச்சாட்டுபுதுடில்லியில் முதல்வர்அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு மதுபான கொள்முதல், விற்பனை, வரி விதிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் முந்தைய கலால் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டு, புதிய கலால் கொள்கை கடந்த ஆண்டு நவம்பரில் அமலுக்கு வந்தது.இதில், மதுபான தொழிற்சாலைகளுக்கு பல்வேறு சலுகைகள், வரி விலக்குகள், உரிம கால நீட்டிப்புகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும், இதற்கு பல கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.இந்த விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. புதுடில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீடு, அலுவலகம் மற்றும் வங்கி, ‘லாக்கர்’களை சி.பி.ஐ., சோதனையிட்டது.

மணீஷ் சிசோடியாவுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள கட்சியினர்,மதுபான அதிபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.சிசோடியா உட்பட 14 பேர் மீது, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இன்று காலை 11:00 மணிக்கு புதுடில்லி சி.பி.ஐ., அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி மணீஷ் சிசோடியாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.இது குறித்து மணீஷ் சிசோடியா வெளியிட்ட அறிக்கை:என் வீட்டில், சி.பி.ஐ., 14 மணி நேரம் சோதனை நடத்தியது; அதில் எதுவும் சிக்கவில்லை. என் வங்கி லாக்கரை சோதனையிட்டது; அதிலும் எதுவும் சிக்கவில்லை. என் சொந்த கிராமத்திலும் அவர்களுக்கு எதுவும் சிக்கவில்லை.

எனவே, இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பி உள்ளனர். நான் நேரில் சென்று விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். பரபரப்புஇதற்கிடையே, மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ., இன்று கைது செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஆம் ஆத்மி கட்சியினரிடமும், புதுடில்லி அரசியலிலும் பரபரப்பு நிலவுகிறது. ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், புதுடில்லி சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவருமான சத்தியேந்தர் ஜெயின், ஏற்கனவேசட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.