அதிமுகவில் சட்டவிதிகளை மாற்றுவது அபாயகரமான சூழல் – ஓபிஎஸ் பேட்டி..!

திமுகவில் சட்டவிதிகளை மாற்றுவது அபாயகரமான சூழல் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. பின்னர் 6 மாதத்திற்கு பிறகு மீண்டும் இன்று சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார். அதன்படி சென்னை தலைமை செயலகத்தில் உள்ள கூட்டரங்களில் இன்று காலை 10 மணிக்கு பேரவை கூட்டம் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும், எலிசபெத் ராணி, அஞ்சலை பொன்னுசாமி, முலாயம் சிங் யாதவ், கொடியேறி பாலகிருஷ்ணன், சேடபட்டி முத்தையா, முன்னாள் எம்எல்ஏ தர்மலிங்கம் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் இன்றை கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும், நாளை மீண்டும் கூட்டத்தொடர் நடைபெறும் என அப்பாவு தெரிவித்தார். இதையடுத்து, வெளியே வந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்துகொள்வது குறித்து தகவல் வந்தது அதிமுக சார்பாக ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக கலந்துகொண்டுள்ளோம் என்றார்.

அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் எடுக்கும் முடிவுகளை ஏற்றுக்கொள்கிறோம். தொண்டர்களுக்கான இயக்கமாக அதிமுக உருவாக்கப்பட்டது. எம்ஜிஆர்-க்கு பிறகு ஜெயலலிதா 30 ஆண்டுகாலம் இயக்கத்திற்கு மிகப்பெரிய வலுவினை ஏற்படுத்தினார். இருபெரும் தலைவர்களும் செய்த தியாகங்கள், ரத்தம் சிந்தி வளர்த்த இயக்கம், சட்ட விதி, அடிபிறழாமல் கட்டிக்காத்த மாண்பு பலநூறு ஆண்டுகளானாலும் சட்ட விதியை எந்தவித மாசுவும் படாமல் காக்கும் பொறுப்பில் இருக்கிறோம்.

அதிமுகவை கட்டிக்காக்கும் சிப்பாய்களாக ஒன்றரைகோடி உறுப்பினர்களும் உள்ளனர். தொண்டர்கள்தான் அடித்தளம், ஆணிவேர்,சாதாரண தொண்டன் கூட இயக்கத்தின் தலைமைப் பொறுப்பிற்கு வரமுடியும். சட்டவிதியை மாற்றுவது அபாயகரமான சூழல் . 10 மாவட்டச்செயலாளர்கள் முன்மொழிய வேண்டும், வழிமொழிய வேண்டும் என்ற விதி எம்ஜிஆரின் ஆன்மாவில் மிகப்பெரும் வலியை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்தார்.