வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய யூடியூபர் மீது பாய்ந்தது தேசிய பாதுகாப்பு சட்டம்.!!

மிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய பீகார் யூடியூபர் மணிஷ் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது..

வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்தி பரவி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தமிழக காவல்துறை அதிரடியாக செயல்பட்டு, அவ்வாறு தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை என்ற உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.

பாஜக நிர்வாகி உள்ளிட்டோர் மீது வதந்தி பரப்பிய குற்றச்சாட்டுக்காக போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். அதில் மூளையாக செயல்பட்டவர் பீகாரை சேர்ந்த யூடியூபர் மணிஷ் காஷ்யப் என்பதை போலீஸார் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து பீகார் சென்ற தமிழ்நாடு தனிப்படை மணிஷ் காஷ்யப்பை தேடி வந்தது. இதனிடையே அவர் அங்கு நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை தமிழ்நாடு அழைத்து வந்து மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மணிஷ் காஷ்யப்பை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அவர் மீது பீகாரிலும் வழக்கு நிலுவையில் இருப்பதால், பீகார் போலீஸார் அவரை மீண்டும் பீகார் அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், யூடியூபர் மணிஷ் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மதுரை எஸ்.பி. சிவபிரசாத் அறிவித்துள்ளார்.