மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 பெண்களுக்கு மயக்க மருந்து கலந்த டீயைக் கொடுத்து தாலி, கம்மல் போன்ற தங்க நகைகளை கொள்ளையடித்த மூன்று பேரை ரயில்வே போலீசார் தேடி வருகின்றனர் .
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த மதியனூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் ரோணிகா(56), தமிழ்செல்வி (44). உறவினர்களான இருவரும் மும்பையில் துக்க நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று விட்டு, அரக்கோணம் வழியாக நாகர்கோவில் செல்லும் ரயிலில் பயணம் செய்தனர் .
இந்த ரயில் நேற்று இரவு மும்பையில் இருந்து புறப்படும்போதே ரோணிகா, தமிழ்ச்செல்வி பயணம் செய்த பெட்டிக்கு வந்த அடையாளம் தெரியாத 3 ஆண்கள், அவர்களுக்கு எதிர்சீட்டில் அமர்ந்துள்ளனர். தொடர்ந்து இருவரிடமும் நைசாக பேச்சுக் கொடுத்துள்ளனர். பின்னர் அவர்கள் வைத்திருந்த டீயை வலுக்கட்டாயமாக கொடுத்துள்ளனர். அந்த டீயை இரு பெண்களும் குடித்துள்ளனர். அதன் பிறகு சிறிது நேரத்தில் இருவருக்கும் மயக்கம் ஏற்பட்டுள்ளது.
அரக்கோணம் அருகில் ரயில் வரும் போது லேசாக மயக்கம் தெளிந்துள்ளது. அப்போது தமிழ்ச்செல்வி கழுத்தில் அணிந்திருந்த தாலி, கம்மல் மற்றும் ரோணிகா
அணிந்திருந்த தாலி ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டது தெரிந்தது. இதுகுறித்து அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்து தமிழ்ச்செல்வி, ரோணிகா ஆகியோரை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் .
அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். முழுமையாக மயக்கம் தெளிந்த பிறகு திருடுபோன நகைகள் , அவை எத்தனை கிராம் என்பது குறித்த விவரங்கள் தெரியவரும். இச்சம்பவம் ரயில் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அரக்கோணம் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Leave a Reply