முபின் கூட்டாளிகள் முக்கிய இடங்களில் குண்டு வைக்க சதி? என்.ஐ.ஏ. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த அக்டோபர் 23-ந் தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவன் கோவையில் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டு இந்த சம்பவத்தை அரங்கேற்றியதும், அதில் அவனே சிக்கி இறந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக உக்கடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு கார் குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக முகமது தல்கா, முகமது அசாரூதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 6 பேரை கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு, கோவை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆட்சேபகரமான மற்றும் மத ரீதியான அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்பாடுகள் கொண்ட நபர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணையும் மேற்கொண்டனர். இதுவரை 50க்கும் அதிகமானவர்களிடம் விசாரணை நடைபெற்றது. மேலும் தமிழகம் முழுவதும் கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 43 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகளால் சோதனையும் நடத்தப்பட்டது. கார் குண்டு வெடிப்பில் இறந்த முபின் மற்றும் கைதானவர்களின் நண்பர்களையும் கண்காணித்து வந்தனர். குறிப்பாக ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்ததாக கோவையில் 3 பேரை போலீசார் தங்களது கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து தீவிரமாக கண்காணித்தனர்.
இந்த நிலையில், கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக கோவை போத்தனூரை சேர்ந்த முகமது தவுபிக்(25), பெரோஸ்கான்(28), நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் உமர் பாரூக்(39) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்கள் 3 பேரும் ஜமேசா முபினுக்கு பல்வேறு வகைகளில் உதவியாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஆட்டோ டிரைவான உமர்பாரூக் கடந்த 3 மாதத்திற்கு முன்பு உக்கடத்திற்கு வந்து வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். மேலும் இறந்த ஜமேஷா முபின் மற்றும் தற்போது கைதாகி உள்ள பெரோஸ்கான், உமர் பாரூக் ஆகியோர் குன்னூரில் உள்ள உமர் பாரூக்கின் வீட்டில் சந்தித்துள்ளனர். அப்போது வெடிகுண்டு சதி திட்டம் தீட்டுவதற்கு ரகசிய கூட்டமும் நடத்தி உள்ளனர்.
அப்போது அவர்கள் முக்கிய இடங்களில் குண்டு வெடிக்க வைக்க சதி திட்டம் தீட்டியிருக்க வாய்ப்பிருப்பதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதனால் அவர்கள் ரகசிய கூட்டத்தில் என்னென்ன பேசினார்கள். எங்கெல்லாம் குண்டு வைக்க திட்டமிட்டார்கள், கோவை கார் குண்டுவெடிப்பு குறித்து முபின் இவர்களிடம் தெரிவித்தாரா? என்பது குறித்தும் தீவிரமாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். இதேபோல் கைதாகி உள்ள முகமது தவுபீக் சில தீவிரவாத செயல்கள் தொடர்பான புத்தகங்களை படித்துள்ளார். அவரது வீட்டில் வெடி பொருட்கள், வெடிக்க வைக்கும் தொழில் நுட்பம் குறித்தும் சில குறிப்பு கையேடுகளும் இருந்துள்ளது. இதனை கைப்பற்றியுள்ளனர். தொடர்ந்து 3 பேருக்கும் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. இவர்கள் 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. மேலும் கைதாகி உள்ள 3 பேருடன் தொடர்பில் இருந்தவர்கள் விவரங்களையும் சேகரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.