ஒரே பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் : வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்க அவகாசம்..!

மிழகத்தில் கடந்த செப்டம்பர் 10-ம் தேதி முதல் மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. அத்துடன், ஒரு வீட்டுக்கு ஒருஇணைப்புக்கு மேல் மின் இணைப்பு வைத்திருந்தால், ஒரு இணைப்புக்கு மட்டும்தான் அரசின் 100 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் மானியம் வழங்கப்படும்.

மற்ற இணைப்புகளுக்கு இவை ரத்து செய்யப்படுவதுடன் அந்த மின் இணைப்புக்கான கட்டணமும் பொது பயன்பாட்டுக்கான கட்ட ணமாக மாற்றப்படும். இதுதொடர்பாக, 2 வாரத்துக்குள் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு வைத்துள்ள வீட்டு உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்குமாறு மின் வாரியத்துக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், இது தொடர்பாக மின்வாரியத்துக்கு சில சந்தேகங்கள் எழுந்தன. குறிப்பாக, வாடகை மற்றும் குத்தகைக்கு விடப்பட்டுள்ள வீடுகளுக்கு அதற்கான ஒப்பந்த ஆவணங்களை வாங்க வேண்டுமா, அதேபோல், கூட்டுக் குடும்பமாக வசிப்பவர்கள் தனித்தனி குடும்ப அட்டை வைத்திருந்தால் அந்தக் குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்தும் ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்வாரியம் தரப்பில் விளக்கம் கோரப்பட்டது.

மேலும், வடகிழக்குப் பருவ மழை காரணமாக மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள், பண்டிகை காலம் ஆகியவற்றால் 2 வாரத்துக்குள் வீடு வீடாகச் சென்று நோட்டீஸ் வழங்க போதிய நேரம் இல்லாததால், நோட்டீஸ் வழங்க கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் மின்வாரிய தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று நோட்டீஸ் வழங்குவதற்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி வரை நீட்டித்து மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.