கோவையில் அதிசய கோழி முட்டை- கின்னஸ் சாதனைக்கு முயற்சி..!

கோவை குரும்பபாளையத்தில் வீட்டில் வளர்த்து வரும் கோழி இட்ட முட்டையின் நீளம் எடை ஆகியவை வழக்கத்திற்கு மாறாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை குரும்பபாளையம் விவேகானந்தா நகர் பகுதியில் அபு – ஷாமிளா தம்பதியினர் வசித்து வருகின்றனர். எம்.இ பட்டதாரியான ஷாமிளா கோழி வளர்ப்பில் ஆர்வம் கொண்டுள்ளார். கணவரின் உதவியுடன் தனது வீட்டிலேயே கூண்டுகள் அமைத்து 50-க்கும் மேற்பட்ட கோழி மற்றும் சேவல்களை வளர்த்து வருகிறார். இவர் வளர்த்து வரும் கோழிகளுக்கு வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுக்கும் சத்தான தானியங்களை கொடுத்து வளர்த்து வருகிறார். இதனால் இவர்கள் வளர்த்து வரும் நாட்டுக்கோழி முட்டைகளை பலர் வீடு தேடி வாங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் ஷாமிளா அபு வளர்த்து வரும் கோழிகளில் ஒரு கோழி வழக்கத்திற்கு மாறாக நீளம், அகலம் மற்றும் எடை எல்லாம் அதிக அளவில் கொண்ட முட்டையை இட்டுள்ளது.
நேற்று முன்தினம் இந்த முட்டையை கண்டெடுத்த ஷாமிளா முட்டையின் வித்தியாசத்தை கண்டு கூகுளில் விவரங்களை தேடி பார்த்துள்ளார். அப்போது இந்த முட்டையின் அதிக எடை மற்றும் நீளம் ஆகியவை உலக சாதனை முயற்சிக்கு செல்லும் என்பதை அறிந்து உலக கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பெற முயற்சி செய்தார். இதற்கான விவரங்களையும் அனுப்பியுள்ளார்.

சாதாரணமாக கோழி முட்டையின் எடை 40 கிராம் முதல் 50 கிராம் வரை இருக்கும் நிலையில், இந்த கோழி முட்டையின் எடை 90 கிராமாக இருக்கிறது என்றும் நீளம் 8.1 இன்ச் என்றும் சுற்று வட்ட அளவு 6 இன்ச் உள்ளது என்றார். இந்த முட்டையின் எடை விகிதம் ஆச்சரியம் அளிக்கிறது என தெரிவித்துள்ள ஷாமிளா, எம்.இ. படித்துவிட்டு நான் கோழி வளர்ப்பதை பார்த்து நகைத்தவர்கள் இன்று ஆச்சரியத்துடன் பார்ப்பதாக தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய அபு, கோழி வளர்ப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருந்தது. அதைத் தாண்டி வளர்த்தேன் என்றும் ஆனால் எனது கோழிக்கு இதுவரை எந்த நோயும் வந்ததில்லை என்றார். ஆரோக்கியமான உணவுகள் கொடுப்பதால் கோழி ஆரோக்கியமாக உள்ளது என கூறிய அபு,இந்த கோழி வளர்ப்பை அதிகப்படுத்த வேண்டும் என விரும்புகிறேன் என்றும் அதற்கு பட்டதாரியான எனக்கு அரசு உதவ வேண்டும் என்றார்.