கோவைக்கும் வருகிறது மெட்ரோ ரயில் திட்டம்… பிடிஆர் அடுத்த அதிரடி அறிவிப்பு..!

சென்னை: இன்று தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை அமைச்சர் பிடிஆர் தாக்கல் செய்தார். இதில் மெட்ரோ விரிவாக்கம் குறித்து பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தது.

இந்தியாவிலேயே பொது போக்குவரத்து சிறப்பாக உள்ள மாநிலங்களில் முதன்மையானது தமிழ்நாடு. நமது மாநிலத்தில் அனைத்து முக்கிய ஊர்களுக்கும் பேருந்து போக்குவரத்து நிச்சயம் இருக்கும்.

அதேபோல நகரங்களுக்கு உள்ளே போக்குவரத்து உட்கட்டமைப்பை மேம்படுத்தவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக நகர் பேருந்துகள், மெட்ரோ தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தமிழக நகரங்கள் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் நகரங்களின் சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னையில் இதற்காகவே மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனிடையே இன்று தமிழக பட்ஜெட்டை அமைச்சர் பிடிஆர் தாக்கல் செய்த நிலையில், இதில் மெட்ரோ விரிவாக்கம் குறித்து பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தது. சென்னை தாண்டி மற்ற இரண்டாம் நிலை நகரங்களிலும் மெட்ரோ திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்த நிலையில், அது குறித்த அறிவிப்புகளும் இதில் இடம் பெற்றிருந்தது. முதலில் இந்தப் பட்ஜெட்டில் சென்னை மெட்ரோவுக்கான திட்டங்களை அமைச்சர் பிடிஆர் விளக்கினார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், “பூந்தமல்லி- கோடம்பாக்கம் மின் நிலை பிரிவு வரையிலான உயர்மின் தடம் 2025 டிசம்பர் மாதம் பயன்பாட்டிற்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். இந்தாண்டு சென்னை மெட்ரோவுக்கு 10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை மாநகரம், இந்தியாவிலேயே வேகமாக வளரும் இரண்டாம் நிலை நகரங்களில் முதன்மையானது.

ஜவுளி தொழில் வர்த்தகம், தொழில்நுட்பம், மருத்துவ வசதி, உற்பத்தி எனத் தொழில்களின் சிறந்து விளங்குகிறது. மேலும், தொழில்முனைவுக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது. கோவையின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இங்கு மெட்ரோ திட்டத்தைச் செயல்படுத்தத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டம் அவினாசி சாலை சத்தியமங்கலம் சாலைகளை உள்ளடக்கி 9000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்” என்றார்.