டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம்.. எடப்பாடிக்கு அழைப்பு… ஓபிஎஸ்ஸை கழட்டிவிட பாஜக.!!

டெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் வரும் 18 ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. ஓ பன்னீர் செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

நாடாளுமன்ற தேர்தல் வரும் 2024 ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறும் என தெரிகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியிருப்பதால் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்க தொடங்கியிருக்கிறது. மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள திட்டமிட்டுள்ளன. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் பாட்னாவில் கூடி ஆலோசித்தன. அடுத்த கூட்டம் பெங்களூரில் நடைபெறுகிறது.

எதிர்க்கட்சிகளின் ஆலோசனை ஒருபக்கம் நடந்து கொண்டு இருக்க, ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து ஆட்சியை தக்க வைக்க பாஜக வியூகம் வகுத்து வருகிறது. இதற்காக பாஜக அவ்வப்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் வரும் 18 ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி தொடருமா? என்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. இதற்கு சமீப காலமாக தமிழக பாஜகவிற்கும் அதிமுகவுக்கும் இடையே நடைபெறும் வார்த்தை போர் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அண்மையில் நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனசாமி, தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது.

தேர்தல் வருகிற போது நிச்சயம் எந்தெந்த கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என்று சொல்வோம். பா.ஜ.க. பற்றி நாங்கள் ஏற்கனவே சொல்லி விட்டோம் எனக் கூறியிருந்தார்.