சென்னை : அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி மற்றும் 2 முன்னாள் எம்.எல்.ஏக்கள் சென்னை தனியார் ஹோட்டலில் ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒரு வாரமாக சொந்த ஊரான பெரியகுளத்தில் தங்கியிருந்து, தனது ஆதரவாளர்களைச் சந்தித்ததோடு முக்கிய ஆலோசனைகளிலும் ஈடுபட்டு வந்தார் ஓபிஎஸ்.
இந்நிலையில், நேற்று கிளம்பி சென்னை வந்தார் ஓபிஎஸ். சென்னை வந்ததுமே, மாலையில் மயிலாப்பூர் தனியார் ஹோட்டலில் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் விழுப்புரம், நாமக்கல் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய புள்ளிகள் நேரில் வந்து ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி நடத்திய அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என உயர் நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி சென்னையில் இருந்து தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருக்கும் தனது வீட்டிற்குச் சென்றார் ஓ.பன்னீர்செல்வம். கைலாசபுரம் பண்ணை வீட்டில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தினமும் தனது ஆதரவாளர்களைச் சந்தித்துப் பேசி வந்தார்.
தனது பண்ணை வீட்டில் தினமும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ஓபிஎஸ்ஸை சந்தித்துப் பேசினர். தமிழகம் முழுவதும் ஈபிஎஸ் ஆதரவு நிர்வாகிகளை தம் பக்கம் இழுக்க வேண்டும் என்ற ஓபிஎஸ்ஸின் திட்டப்படி, அவரது ஆதரவாளர்கள் முழுவேகத்தில் அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஈபிஎஸ் ஆதரவாளர்களாக இருந்த நிர்வாகிகள் பலர் ஓபிஎஸ் பக்கம் சாய்ந்து வருகின்றனர்.
ஒரு வாரத்திற்கும் மேலாக சொந்த ஊரில் தங்கியிருந்த ஓபிஎஸ், பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருக்கும் நிலையில், நேற்று சென்னை வந்தார். நேற்று காலை 10 மணி அளவில் ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து கிளம்பி கார் மூலமாக மதுரை சென்றார். மேலும் அங்கிருந்து விமானம் மூலம் கிளம்பி சென்னை வந்தடைந்தார்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் விழுப்புரம், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின்போது, மேற்கண்ட மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் திரண்டு வரிசையாக வந்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு பூங்கொத்து கொடுத்தும் சால்வை அணிவித்தும்ஆதரவு தெரிவித்தனர்.
அப்போது விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பியும், முன்னாள் எம்.எல்.ஏவுமான செஞ்சி சேவல் ஏழுமலை, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தராஜ் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். 1 முன்னாள் எம்.பி மற்றும் 2 முன்னாள் எம்.எல்.ஏக்கள் ஓபிஎஸ்க்கு ஆதரவளித்துள்ளது ஓபிஎஸ் அணிக்கு உற்சாகம் கொடுத்துள்ளது. எடப்பாடி ஆதரவாளர்கள் பலர் ஓபிஎஸ் பக்கம் தாவி வருவது எடப்பாடிக்கு ஷாக் கொடுத்துள்ளது.
ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவளித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கிருஷ்ணகிரி முன்னாள் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான கோவிந்தராஜ், “ஓபிஎஸ் தலைமையில் இயக்கத்தை வலுப்படுத்தவும், அடுத்த தேர்தலில் ஓபிஸ்ஸை முதல்வராகவும் ஆக்க பாடுபடுவோம். கிருஷ்ணகிரியில் இருக்கும் கருங்காலிகளால் கொதித்தெழுந்து ஓபிஎஸ் பக்கம் இணைந்துள்ளோம். இன்னும் பலர் வர இருக்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்னதாக, தனியார் ஹோட்டலுக்கு வந்த நடிகரும் இயக்குநருமான பாக்கியராஜ் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தார். இருவரும் தனியறையில் சந்தித்துப் பேசினர். அப்போது முக்கிய நிர்வாகிகள் சிலர் மட்டும் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாக்யராஜ், ஈபிஎஸ், ஓபிஎஸ் இணைந்து செயல்பட வேண்டும், நான் ஈபிஎஸ்ஸை சந்தித்துப் பேசுவேன் எனத் தெரிவித்தார்.
Leave a Reply