உலக மக்களை அச்சுறுத்தும் குரங்கம்மை: இதுவரை 35,000 பேர் பாதிப்பு-தடுப்பூசிகளின் தேவை பன்மடங்கு அதிகரிப்பு-WHO எச்சரிக்கை..!!

ஜெனிவா: உலகம் முழுவதும் குரங்கம்மை பரவல் தீவிரமடைந்துள்ளதால் தடுப்பூசிகளின் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா தாக்கத்தில் இருந்து விடுபட முடியாமல் உலக நாடுகள் போராடி வரும் நிலையில், குரங்கம்மை பரவல் வேகமெடுத்து வருவது சுகாதார அமைப்புகளுக்கும் பெரும் சவால்களை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது வரை 92 நாடுகளில் குரங்கம்மை பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் தெரிவித்துள்ளார்.

இந்த நாடுகளில் சுமார் 35 ஆயிரம் பேர் குரங்கம்மை கிருமிக்கு இலக்காகி இருப்பதாக அதானம் கூறியுள்ளார். குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்திருப்பதாகவும், WHO-வின் தரவுகள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதும் குரங்கம்மை பரவல் தீவிரமடைந்து வருவதாக தெரிவிக்கும் உலக சுகாதார அமைப்பு, கடந்த வாரத்தில் மட்டும் 7,500 பேருக்கு குரங்கம்மை உறுதியாகி இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. உலகம் முழுவதும் குரங்கம்மை பரவல் தீவிரமடைந்துள்ளதால் தடுப்பூசிகளின் தேவை சர்வதேச அளவில் பன்மடங்கு அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.