மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு : படுகாயம் அடைந்த ஆசாமி கோவையில் தங்கி சதித் திட்டம் – ரகசிய இடத்தில் வைத்து உதகை ஆசிரியரிடம் விசாரணை
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் பலியானார். இதை அடுத்து கோட்டைமேட்டில் உள்ள அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தி 75 கிலோ வெடி மருந்து, 109 பொருட்களை கைப்பற்றினார்கள். இந்த வழக்கு தொடர்பாக ஜமேஷா முபின் உறவினர் அப்சல் கான், அசாருதீன் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். தற்போது இந்த வழக்கை என்.ஐ.ஏ விசாரித்து வருகின்றது.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்த சம்பவத்தில் முகமது ஷாரிக் என்பவர் படுகாயம் அடைந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கர்நாடக மாநிலம் சிமோகா அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த இவர் தான் குக்கர் குண்டு வெடிப்புக்கு மூல காரணமாக என்றும் இவர் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தவர் என்பது தெரிய வந்தது.
மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு சிமோகா பகுதியில் கைதான இரண்டு பேரிடம் நடத்திய விசாரணையில் அவர்களுக்கு வெடிபொருள் சப்ளை செய்தவர் முகமது ஷாரிக் என்பதும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் குக்கர் வெடிப்பு ஆசாமி முகமது ஷாரிக் கடந்த செப்டம்பர் மாதம் கோவை சிங்காநல்லூரில் உள்ள ஒரு வாடகை குடியிருப்பில் தங்கி இருந்துள்ளார். நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு தனியார் பள்ளி ஆசிரியர் சுரேந்திரன் என்பவர் சிங்காநல்லூரில் பணியாற்றி வந்துள்ளார். அவருடன் நெருக்கத்தை ஏற்படுத்திய முகமது ஷாரிக் அவரது அறையில் தங்கி இருந்துள்ளார். அப்பொழுது சுரேந்திரனின் ஆதார் கார்டை பயன்படுத்தி சிம்கார்டு வாங்கியுள்ளார். இதை அறிந்த தனிப்படை போலீசார் சுரேந்திரனை கோவை அழைத்து வந்து தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே மங்களூரைச் சேர்ந்த போலீஸ் தனிப்படையும் கோவை வந்துள்ளது. சுரேந்திரனுக்கும் முகமது ஷாரிக்கும் உள்ள தொடர்பு என்ன என்பது குறித்து தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். முகமது ஷாரிக் கோவையில் தங்கி இருந்து சதி ஆலோசனை நடத்தி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த இரண்டு சம்பவமும் ஒத்துப் போவதால் இரு மாநில போலீசாரும் கூட்டு சேர்ந்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பான குறிப்புகள் கோவை ஜமேஷா முபின் வீட்டில் கண்டெடுக்கப்பட்டது. மங்களூரில் குக்கர் வெடிப்பில் தொடர்புடைய முகமது ஷாரிக் ஐ.எஸ் ஆதரவாளர் என்று கூறப்படுகிறது.
எனவே கோவையில் பலியான ஜமேஷா முபினை, முகமது ஷாரிக் சந்தித்து சதித் திட்டம் தீட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து கோவை நகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் முகமது ஷாரிக் ஜமேஷா முபினை சந்தித்துள்ளாரா ? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். செல்போன் எண்ணை கைப்பற்றி ஆய்வு செய்த போது அவர் தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வந்து சென்றதும் போலீஸ் விசாரணையில் உறுதியானது.
கோவையில் ஜமேஷா முபின் தற்கொலை படை தாக்குதல் போல் செயல்பட்டு இறந்தார். அதேபோல் மங்களூருவில் முகமது ஷாரிக் ஆட்டோவில் குக்கர் குண்டை வெடிக்க செய்து தற்கொலை தாக்குதல் போல் செயல்பட்டுள்ளார். எனவே கோவை மற்றும் மங்களூர் சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போவதால் என்.ஐ.ஏ மற்றும் இரு மாநில போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர். தற்பொழுது இந்த இயக்க ஆதரவாளர்கள் யார் யார் என்ற பட்டியலே தயாரித்து தேடுதல் வேட்டையும் முடுக்கி விடப்பட்டுள்ளது.
Leave a Reply