5ஜி ஏலத்தில் முறைகேடு: ரூ.5 லட்சம் கோடி ஏலத்தில் 1.5 லட்சம் கோடி இருக்கு… மீதி எங்க இருக்கு.. ? ஆ.ராசாவுக்கு வானதி சீனிவாசன் பதிலடி..!

கடந்த 26ம் தேதி 5 ஜி அலைகற்றைக்கான ஏலம் தொடங்கியது. பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் – ஐடியா, அதானி குழுமம் ஆகிய 4 நிறுவனங்கள் ஏலத்தில் பங்குகேற்றன.

இந்த ஏலத்தின் முதல் நாளன்று, இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1.45 லட்சம் கோடி வரை நிறுவனங்கள் ஏலம் கேட்டனர் என்று கூறப்பட்டது. அதேபோல் கடந்த 2015 ல் நடைபெற்ற 4ஜி ஏலத்தின் சாதனையை முறியடித்து இருப்பதாகவும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

மொத்த ஏலத்தொகையான ரூ.1,50,173 கோடியில், அதிகபட்சமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஏலத்தொகை ரூ.88,078 கோடியாகும். பார்த்தி ஏர்டெல் நிறுவனத்தின் ஏலத்தொகை ரூ.43,048 கோடி, வோடப்போன் – ஐடியா நிறுவனத்தின் ஏலத்தொகை ரூ.18,799 கோடி, அதானி டேட்டா நெட்ஒர்க்சின் ஏலத்தொகை ரூ.212 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசும் போது, ‘2 ஜி அலைக்கற்றை ஏலத்திற்கு பின் ரூ.1.76 லட்சம் கோடி அரசுக்கு நஷ்டம் என்று கூறினார்கள். ஆனால் 5 ஜி அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது. 5 ஜி அலைக்கற்றை ரூ.5 லட்சம் கோடிக்கு ஏலம்போகும் என்று மத்திய அரசு கூறியது. ஆனால் ரூ.1.5 லட்சம் கோடிக்கு தான் சென்றுள்ளது.

எஞ்சிய பணம் எங்கு சென்றது என்பது பற்றி மத்திய அரசு தான் பதிலளிக்க வேண்டும்’ என்று கடுமையாக மத்திய அரசை விமர்சித்தார். இதுகுறித்து பதிலளித்த பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கின் எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன், ‘ இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு லாபத்தை நாட்டிற்கு தந்திருக்கிறது 5ஜி அலைக்கற்றை. இது பற்றி குறை கூறும் ஆ.ராசாவுக்கு தான் இதில் எப்படி ஊழல் செய்யலாம் என்பது தெரியும்.

பாஜகவுக்கு தெரியாது. இந்த அரசாங்கம் ஒரு குற்றச்சாட்டுக்கு கூட இல்லாமல் எட்டு ஆண்டுகள் ஆட்சி நடத்தி வருகிறது. இலக்கை எவ்வளவு வேண்டுமானாலும் வைக்கலாம் . ஆனால் வெளிப்படை தன்மை உடன் ஏலம் நடந்திருக்கிறது. தேவையில்லாமல் மத்திய அரசை குறை சொல்லக்கூடாது’ என்று ஆ.ராசாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.