ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா திடீர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு கை சின்னமும், அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னமும், தேமுதிக வேட்பாளருக்கு முரசு சின்னமும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. இத்தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்றக் கூட்டணியின் சார்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், அ.தி.மு.க வேட்பாளராக இரட்டை இலைச் சின்னத்தில் தென்னரசும் போட்டியிடுகின்றனர்.
ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து 10-க்கும் மேற்பட்ட திமுக அமைச்சர்களும், அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து முன்னாள் அமைச்சர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருங்கல்பாளையம் ராஜகோபால் தோட்டம் முதல் சூரம்பட்டி நால்ரோடு வரை பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், ” முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிமுக. ஆட்சியில் 10 ஆண்டுகளில் எந்த திட்டமும் செய்யவில்லை என்று பச்சை பொய் கூறுகிறார். 21 மாத ஆட்சியில் திமுக ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒரு பணி கூட செய்யவில்லை. அமைச்சர்கள் வீதி வீதியாக வந்து வாக்காளர்களுக்கு ரூ.1000, ரூ.2000 என்று கொடுக்கிறார்கள். தேர்தல் ஆணையம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நான் முதலமைச்சராக இருந்தபோது 110 விதியின் கீழ் 5 லட்சம் முதியோருக்கு உதவித்தொகை வழங்க உத்தரவிட்டு 90 சதவீதம் பேருக்கு வழங்கினேன். ஆனால் 21 மாத திமுக ஆட்சியில் 7 லட்சம் முதியோருக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டு உள்ளது.
10 ஆண்டுகளில் 53 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி கொடுத்தோம். அதை தி.மு.க. அரசு நிறுத்தி விட்டது. அம்மா 2 சக்கர வாகனம் வழங்கும்திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் என்று அ.தி.மு.க. திட்டங்களை நிறுத்தி விட்டனர். மின்கட்டணம் 54 சதவீதம் உயர்த்தி விட்டனர்.
இன்னும் 4 ஆண்டுகளில் 24 சதவீதம் உயரும். வீட்டு வரி, கடைவரி என அனைத்தும் உயர்ந்து விட்டது. இப்படி படித்தவர்கள், பாமரர்கள் என்று அனைவரையும் ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது திமுக”எனத் தெரிவித்துள்ளார்.
Leave a Reply