மதுரை விமான நிலையம்.. இனி 24 மணி நேரமும் விமான சேவை… தூங்காநகர மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

துரை: மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேரமும் விமான சேவையை தொடங்க விமான போக்குவரத்து ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.

இதுவரை பகலில் மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், இனி வரும் ஏப்ரல் 1 முதல் இரவிலும் விமானங்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மதுரை விமான நிலையம் 1962-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் பிறகு 2010-ம் ஆண்டில் புதிய முனையக் கட்டிடம் திறக்கப்பட்டது. மதுரை விமான நிலையத்தில் 2013-ம் ஆண்டு முதல் வெளிநாட்டு விமான சேவை நடந்து வருகிறது.

மதுரையில் இருந்து இலங்கை, துபாய், சிங்கப்பூர் ஆகிய 3 நாடுகளுக்கு மட்டும் நேரடி விமான சேவை உள்ளது. மதுரை விமான நிலையம் இதுவரை பன்னாட்டு விமான நிலையமாக நிலை உயர்த்தப்படவில்லை. சுங்க விமான நிலையமாக செயல்படுகிறது.

இங்கு 3 சர்வதேச விமான சேவைகள் இருந்தாலும், மதுரை விமான நிலையம் அதிகளவில் பயணிகளைக் கையாண்டு வருகிறது. கோவை, ஷீரடி, விஜய வாடா, கண்ணூர், திருப்பதி ஆகிய விமான நிலையங்கள் குறைந்த அளவில் பயணிகளைக் கையாளுகின்றன. அவை சர்வதேச விமான நிலையங்களாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளன. மதுரை விமான நிலையம் மட்டும் இன்னும் சுங்க விமான நிலையமாகவே உள்ளது.

மதுரை விமான நிலையத்தை சர்வதேச நிலையமாக அறிவிக்க வேண்டும் என்று 10 ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன. அண்மையில் கூட மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜோதிராதித்திய சிந்தியாவுக்கு கோரிக்கை வைத்தார்.

அதேபோல் மதுரை விமான நிலையத்தில் பகல் நேரங்களில் மட்டுமே விமான சேவைகள் இயங்கி வந்தன. இதனால் இரவு நேரங்களில் விமானங்கள் இயங்க தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்த கோரிக்கையை ஏற்று 24 மணி நேரமும் விமான சேவையை தொடங்க விமான போக்குவரத்து துறை அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி ஏப்ரல் 1 முதல் 24 மணி நேர சேவை தொடங்கும் என இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.

மதுரை மட்டுமல்லாமல் அகர்தலா, இம்பால், போபால், சூரத் உள்ளிட்ட விமான நிலையங்களும் ஏப்ரல் 1 முதல் 24 மணி நேர சேவையை தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் மதுரை விமான நிலையம் விரைவில் சர்வதேச விமான நிலையமாக மாற்றம் பெறும் என்று மக்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.