சென்னை: வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, அடுத்த சில நாட்களில் தாழ்வு மண்டலமாக மாறி புயலாக உருவாக வாய்ப்புள்ள நிலையில், ராமேஸ்வரம் அருகே பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது.. இந்த மழைப்பொழிவு தொடரும் என்று அறிவிப்புகள் வந்தவண்ணம் உள்ளன.
அந்தவகையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா. செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் உள்ளதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதை ஒட்டிய மாவட்டங்கள், வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்றைய தினம் (ஆகஸ்ட் 10) இடியுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஆகஸ்ட் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் நேற்று (ஆக.9) காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் மேல் பவானியில்22 செ.மீ., அவலாஞ்சியில் 19 செ.மீ., கூடலூர் பஜாரில் 17 செ.மீ., கோயம்புத்தூர் மாவட்டம் சோலையாறில் 12 செ.மீ., சின்னக்கல்லாரில் 11 செ.மீ., வால்பாறையில் 10 செ.மீ.மழை பதிவாகியுள்ளது” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வங்கக்கடலில் புயல் உருவாகி உள்ளது.. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, அடுத்த சில நாட்களில் தாழ்வு மண்டலமாக மாறி புயலாக உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த புயல் சின்னம் ஆந்திரா வடக்கு கடலோர பகுதியிலும், ஒடிசா புவனேஸ்வர் துறைமுகத்தில் இருந்து வடமேற்கில் 100 கி.மீயில் மையம் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.. வங்கக்கடலில் உருவான புயல் காரணமாக, தமிழக கடலோர மாவட்டத்தில் சூறாவளி காற்று வீசி கடலில் கொந்தளிப்பு ஏற்படும் என்று ஏற்கனவே வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, பாம்பன் துறைமுக அலுவலகத்தில் தொலைதூர புயல் எச்சரிக்கையாக 1ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.. இதனால் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க மீன்துறையினர் தடை விதிக்கப்பட்டுள்ளது.. 7-வது நாளாக விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் கரையோரத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றமாகவே காணப்படுகிறது.