தெரியாத நம்பரிலிருந்து போனா… இனி கவலை வேண்டாம்… வருகிறது ட்ராய் அதிரடி அப்டேட்…!

தொலைபேசிகள் மனித குலத்தின் ஆறாம் விரலாய் மாறிப்போக, அவை இன்றி அன்றாட பணிகளை கூட செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இதன் காரணமாகவே டிஜிட்டல் வர்த்தகத்தின் முக்கிய அங்கமாகவும் செல்போன் உருவெடுத்துள்ளது. என்னதான் அவசர தேவைக்காவும், தகவலை பரிமாறிக்கொள்வதற்காகவும் செல்போன் அதிகளவில் பயன்படுத்தப்பட்டாலும், வணிக மேம்பாட்டிலும் அது பெரும்பங்காற்றி வருகிறது. தொழில் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை, செல்போன் மூலம் நேரடியாக தொடர்பு கொண்டு தங்களது சேவை குறித்து எடுத்துரைத்து வணிகம் தொடர்பான பெரும் ஒப்பந்தங்களையும் எளிமையில் முடிக்க உதவுகின்றன.

செல்போன் மூலமான இந்த வியாபார யுக்தி சாதகமானதாக கருதப்பட்டாலும், பல நேரங்களில் அநாவசிய தொந்தரவாகவே கருதப்படுகிறது. ஒரு நிறுவனத்தின் சேவை வேண்டாம் என கூறிவிட்டாலும், மீண்டும் மீண்டும் வாடிக்கையாளரை தொடர்பு கொண்டு தொந்தரவு செய்வது தற்போது அதிகரித்துள்ளது. அந்த எண்ணை பிளாக் செய்தால் புதிய எண்ணில் இருந்து வாடிக்கையாளரை தொடர்பு கொள்வதும் தொடர்கதையாக உள்ளது. வாடிக்கையாளரின் நிலை மற்றும் அவர் எந்தமாதிரியான சூழலில் உள்ளார் என்பதை சற்றும் அறியாமல், கஸ்டர்மர் கேர் தரப்பில் இருந்து அழைப்புகள் குவிகின்றன.

true caller போன்ற செயலிகளை கொண்டு, செல்போனில் தங்களை அழைப்பது யார் என பயனாளர்கள் தற்போது அறிந்து வருகின்றனர். இதனால், அநாவசியமான அழைப்புகளை ஓரளவிற்கு தவிர்க்க முடிகிறது. இதுதொடர்பாக பொதுமக்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் குவிந்ததை அடுத்து, தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆனாலும், unknown number என்ற பெயரில் வரும் அழைப்புகளை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்நிலையில் தான், பயனாளருக்கு வரும் தொலைபேசி அழைப்புகளை, அழைப்பு மேற்கொள்ளும் நபரின் பெயருடன் செல்போன் திரையில் காண்பிக்க வேண்டும், என்ற விதிமுறையை கொண்டு வர, தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் திட்டமிட்டுள்ளது. குறிப்பிட்ட சிம் கார்டை வாங்குவதற்காக வழங்கப்பட்ட KYC தரவுகளின் அடிப்படையிலான, விவரங்களை திரையில் காட்ட வேண்டும் எனவும் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் வெற்றியை தொடர்ந்து, வாட்ஸ்-அப் செயலி மூலம் மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்கும், இதே நடைமுறையை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பயனாளர்கள் சேமிக்காத எண்ணில் இருந்து அழைப்பு வந்தாலும், மறுமுனையில் இருப்பவர்களின் விவரங்களை அறியும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. true caller போன்ற செயலிகள் மூலம் தற்போது அந்த விவரங்கள் அறியப்பட்டாலும், அந்த செயலியில் பதிவிடப்படும் பயனாளர்களின் தரவுகள் 100% பாதுகாப்பானது என உறுதி செய்ய முடியவில்லை. இதன் காரணமாக புதிய நடவடிக்கையை தொலைதொடர்பு ஒழுங்குறை ஆணையம் முன்னெடுத்துள்ளது.

பயனாளர்களின் அனுமதி இன்றி அவர்களின் விவரங்களை மற்றவர்களின் திரையை காண்பிக்க முடியாது என சில தொலைதொடர்பு நிறுவனங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இது தனிமனித உரிமை மீறல் ஆக மாறக்கூடும் எனவும் விளக்கமளித்துள்ளன. இது தொடர்பாக உரிய ஆலோசனைகளை நடத்தி தீர்வு காண, டிராய் அமைப்பு சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் அமலுக்கு வருவதன் மூலம், true caller போன்ற செயலிகளின் தேவை இருக்காது. மேலும், எளிமையாகவே அநாவசியமான அழைப்புகளை பொதுமக்கள் தவிர்க்கலாம்.