பொள்ளாச்சிக்கு ஆப்பிள் லோடு ஏற்றி வந்த தென்காசி வாலிபர் மீது தாக்குதல் – பெயிண்டர் கைது..!

கோவை: தென்காசியை சேர்ந்தவர் சம்சுதின் (வயது 38). டிரைவர். சம்பவத்தன்று இவர் தனது மினி வேனில் தென்காசியில் இருந்து பொள்ளாச்சிக்கு ஆப்பில் எடுத்து கொண்டு வந்தார்.
ஆப்பிலை பொள்ளாச்சியில் இறக்கிவிட்டு ஊர் திரும்பினார். அப்போது பொள்ளாச்சி புது பஸ் நிலையம் சென்று அங்குள்ள ஒரு பேக்கரிக்கு சென்றார். அங்கு நின்று இருந்த போது ஒருவர் வந்தார். அவர் சம்சுதின் அருகில் வந்து அவரிடம் எங்கே செல்கிறாய் என கேட்டார். அதற்கு அவர் தென்காசியில் இருந்து வந்ததாகவும் திரும்பி ஊருக்கு செல்வதாகவும் கூறினார். அப்போது அந்த மர்ம நபர் எதற்காக இங்கே நிற்கிறாய் உடனே இங்கு இருந்து செல் என்றார்.
இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த மர்ம நபர் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருந்த கல்லை எடுத்து தலையில் தாக்கினார்.
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் பலத்த காயம் அடைந்த சம்சுதினை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் இதுகுறித்து சம்சுதின் பொள்ளாச்சி மேற்கு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சம்சுதினை தாக்கிய பாலக்காட்டை சேர்ந்த பெயிண்டர் ராபட் விஜயன் (45) என்பவரை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.