நில மோசடி புகார்… ஆலாந்துறை பேரூராட்சி மாஜி தலைவர் கைது..!

கோவை அருகே உள்ள மாதம்பட்டி சென்னனூர் , தர்ஷினி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் ( வயது 40) இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் கோவையில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அந்த நிறுவனத்திற்கு சொந்தமான 60 சென்ட் விவசாய நிலம் ஜாகீர் நாயக்கன்பாளையத்தில் உள்ளது. அந்த நிலம் நரசிபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் சாமி என்பவரிடமிருந்து 2008 ஆம் ஆண்டு வாங்கப்பட்டது . அந்த நிலத்தை ஆலாந்துறை பேரூராட்சி முன்னாள் தலைவர் நாகராஜ் ( வயது 65 )என்பவர் இடைத்தரகராக இருந்து வாங்கி கொடுத்து உள்ளார். இந்த நிலையில் நாகராஜ் கடந்த 2015 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நிரஞ்சனா என்பவருக்கு போலி ஆவணங்கள் தயாரித்து 60 சென்ட் இடத்தில் 10 சென்ட் இடத்தை விற்பனை செய்து உள்ளார். மீதி உள்ள 50 சென்ட் இடம் தனக்கு சொந்தமானது என்று கூறி விற்பனை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதை அறிந்து அந்த நிலத்தின் மேற்பார்வையாளர் சீனிவாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த நிலத்தில் கடந்த அக்டோபர் மாதம் 15- ஆம் தேதி பேரூராட்சி முன்னாள் தலைவர் நாகராஜ், அவருடைய மகன் பிரவீன் ராஜ் மற்றும் அடையாளம் தெரியாத 2 பேர் அத்துமீறி நுழைந்துள்ளனர். மேலும் அவர்கள் அந்த இடத்தை சுற்றி அளவு கற்களைப் போட முயன்றுள்ளனர். இதை சீனிவாசன் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சீனிவாசனை தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர். இது குறித்து சீனிவாசன் ஆலாந்துறை போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் ஆலாந்துறை பேரூராட்சி முன்னாள் தலைவர் நாகராஜ், அவரது மகன் பிரவீன் ராஜ் மற்றும் அடையாளம் தெரியாத 2 பேர் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதை தொடர்ந்து சிறுமுகை பகுதியில் பதுங்கி இருந்த பேரூராட்சி முன்னாள் தலைவர் நாகராஜை நேற்று கைது செய்தனர் .பிரவீன் ராஜ் மற்றும் அடையாளம் தெரியாத 2 பேர் உட்பட 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்..