கிங்மேக்கர்” பிராமணர்கள் தான்… பிராமணர் சங்க மாநாட்டில் நாராயணன் பேச்சு..!

கோவை: “பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்துக்காக மத்திய அரசு அறிவித்துள்ள 10 சதவீத இட ஒதுக்கீட்டை, தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு பிராமணர் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற 2 நாள் மாநாட்டை, காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காணொலி வாயிலாக துவக்கி வைத்தார்.

தரமான கலாச்சாரம் மற்றும் பண்பாடு பாதுகாத்தல், இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லுதல், சங்கத்தின் சேவைகளையும் சாதனைகளையும் வெளிப்படுத்துதல், மகளிர் நலன் மற்றும் அவர்களை வலிமைப்படுத்துதல்,வணிகம் மற்றும் தொழில் முனைவோர் பலம் பேணுதல், பிறந்தநாள் சமூக அனைத்து உட்பிரிவுகளையும் சங்கத்தில் இணை செய்தல், உயர்கல்வி ஆலோசனை மற்றும் வேலை வாய்ப்பு தொழில் முனைவோர் ஆலோசனை, பிரம்மா சமுத்திரம் அனைவருக்கும் சென்றடையும் நோக்கத்தில் இந்த மாநாடு நடைபெற்றது.

மாநாட்டில் ‘தத்புத்ர சேவக்’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, இளைஞர்கள் தத்புத்ர சேவக் உறுதிமொழி ஏற்றனர். பிராமண சமூகக் குடும்பங்களுக்கு உதவி தேவைப்படும்போது, நானே வலியச் சென்று அவர்களின் தத்துப்புத்திரனாக செயல்பட்டு அவர்களின் தேவையை நிறைவேற்றி வைப்பேன் என்று விருப்பமுள்ள இளைஞர்களிடம் உறுதிமொழி பெறப்பட்டது. இம்மாநாட்டில் பிரபல பேச்சாளர் பாரதி பாஸ்கர், டாக்டர் அஸ்வின் மோகன், பேராசிரியர் ராம சீனிவாசன், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மற்றும் முக்கிய பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

தமிழ்நாடு பிராமணர் சங்க தலைவர் நாராயணன் பேசியபோது, “நம்முடைய பாரத தேசத்தில், நம் கலாசாரம், பாரம்பரியம், பண்பாட்டை பல நுாற்றாண்டுகளாக நாம் பாதுகாத்து வருகிறோம். அதை இம்மி பிசகாமல் நம்முடைய இளைய தலைமுறையினரிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். திரைப்பட தயாரிப்பாளர் ‘பிரமிட்’ நடராஜன் பேசும்பாது, பிராமணர் என்று வெளியில் சொல்லிக் கொள்ளவே அஞ்சிய காலம் இருந்தது. நம்முடைய சமூகத்தை கொச்சைப்படுத்துவது வன்முறையில் இறங்குவது என்று அரசியல்வாதிகள் நமக்கெதிராக செயல்பட்டனர். இதனால் நமது சமூகத்தினருக்கு தன்னம்பிக்கை குறைந்து செயலற்றவர்களாக இருந்தனர். இப்போது அந்த நிலை மாறியிருக்கிறது என்றார்.

அதேபோல மாநாட்டில், மாநிலத் தலைவர் நாராயணன் பேசியபோது மத்திய மாநில அரசுகளுக்கு ஒரு முக்கிய கோரிக்கையை முன்வைத்தார். “பிராமணர்கள் எப்போதும் சமூகத்துக்காக உழைப்பவர்கள். அரசர்களாக இல்லாமல் இருக்கலாம், ஆனால், ‘கிங் மேக்கர்’களாக இருந்திருக்கிறோம். காமராஜர் ஆட்சி என்று இன்றும் புகழ்கிறோமே, அந்த காமராஜரை உருவாக்கியவரே சத்தியமூர்த்தி அய்யர்தான்.. எளிமையின் மறு உருவம் என்று போற்றப்படும் கக்கனை உருவாக்கியவர் வைத்தியநாத அய்யர். மிகச்சிறந்த நிதியமைச்சர் என்று போற்றப்படும் சி.சுப்பிரமணியத்தை உருவாக்கியவர் ராஜாஜி.

எப்போதும் சமூகத்துக்காக செயலாற்றியபடி இருப்பதுதான் பிராமண சமூகம்.. கேரளாவை போல தமிழகத்திலும் முற்பட்ட சமூகங்களை சார்ந்த ஏழைகளுக்கு உதவும் வகையில் தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். இவரை தொடர்ந்து, ரங்கராஜ் பாண்டே பேசும்போது, மாநாட்டில் சில வேண்டுகோளை விடுத்தார். அத்துடன் திமுக அரசையும் விமர்சித்து பேசினார்..

பாண்டே பேசும்போது, “தொழிலதிபர் ஆவதை விட பிராமணர் ஆக இருக்க வேண்டும் என்பது தான் முக்கியம். நம்முடைய அடையாளம் என்ன என்பதை மறக்கும்போது உங்கள் வரலாறும் அன்றே காலியாகிறது. இப்போது பல பேருக்கு பிராமணர் என்று சொல்லிக் கொள்ளவே தயக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தளவுக்கு உளவியல் ரீதியாக, ஒரு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி விட்டனர். அதை விட்டொழிக்க வேண்டும். பிராமணர் போன்ற வைராக்கியம் எந்த சமூகத்துக்கும் இருப்பதில்லை. அனைத்து சமூகமும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்கிறார்கள். தமிழகத்தில் லட்சக்கணக்கான பிராமணர் அல்லாத அர்ச்சகர்கள் ஏற்கனவே ஆயிரம் ஆண்டுக்கு மேலாக கோவில்களில் பூஜை செய்து வருகிறார்கள்.

திமுக ஆட்சியால் பிராமணர்கள் மத்தியில் புத்தெழுச்சி ஏற்பட்டிருக்கிறது. பாஜக – அதிமுக ஆட்சி வந்திருந்தால், நீங்கள் மழுங்கிப்போயிருப்பீர்கள். இப்போது தான் ஒரு பதட்டமே வருகிறது. இன்னும் மூன்றரை வருடம் மிச்சமுள்ளது. நீங்கள் பார்க்க வேண்டியவை இன்னும் நிறைய உள்ளன. நம்முடைய தார்மீகம், தர்மம் மீது நம்பிக்கை வையுங்கள். கலாச்சாரத்தை தூக்கிப் பிடியுங்கள். என் மண், என் இடம் என்று நில்லுங்கள். பாரதியார், உ.வே.சாமிநாதய்யர், ராமானுஜரும், கணித மேதை ராமானுஜரும், வாஜ்பாயும், ஜெயலலிதாவும் மட்டுமில்லை, வாஞ்சிநாதனும் பிராமணர் தான் என்பதை மறந்து விடாதீர்கள்” என்றார்.