ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறும் கீழ்பவானி பாசனக் கால்வாயை சீரமைத்தல் மற்றும் நவீனப்படுத்துதல் திட்டத்துக்காக ரூ.709.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பிரதான கால்வாயின் மொத்த நீளமான 200 கிலோ மீட்டரில் 65.37 கிலோ மீட்டர் நீளத்துக்கு கால்வாயின் இருபுறமும் கான்கிரீட் கரையும், 23.84 கிலோ மீட்டர் நீளத்துக்கு கான்கிரீட் தளமும் அமைக்கப்படுகிறது. மேலும் கிளை வாய்க்கால்களில் 121.93 கிலோ மீட்டர் நீளத்துக்கு கான்கிரீட் தளம், பழுதடைந்த மதகுகள், பாலம், மழைநீா் வடிகால் கட்டமைப்புகள் உள்ளிட்டவை சீரமைக்கப்படவுள்ளன.
இத்திட்டத்துக்கு கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு, மே மாதத்தில் பணிகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில், பாசன வாய்க்காலில் அமைக்கப்படும் கான்கிரீட் கரை மற்றும் தளத்தால் கசிவுநீர் முற்றிலும் தடைபட்டு நிலத்தடி நீர் பாதிக்கப்படும் அபாயமுள்ளதாக ஒரு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். எனினும் கான்கிரீட் தளம் அமைத்தால் மட்டுமே கடைமடை விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கும் என்று திட்டத்தை செயல்படுத்த மற்றொரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இருதரப்பு விவசாயிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நீா்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் கோவையில் நடைபெற்றது. இதில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சுவாமிநாதன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கீழ்பவானி கால்வாயில் பாசன வசதி பெறும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இருதரப்பு கருத்துகளையும் கேட்டறிந்த அமைச்சர்கள் அடுத்தகட்ட ஆய்வுக் கூட்டத்துக்கு பின் கீழ்பவானி பாசன வாய்க்கால் நவீனப்படுத்துதல் திட்டம் தொடர்பாக விவரங்கள் தெரிவிக்கப்படும் என்றனர்.
இது தொடர்பாக கீழ் பவானி விவசாயிகள் நலசங்கத் தலைவர் செ.நல்லசாமி கூறியதாவது: கீழ்பவானி பாசன கால்வாய் திட்டம் ஒரு மழைநீா் அறுவை திட்டமாகவும், நிலத்தடிநீர் செறிவூட்டும் திட்டமாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் பாசனக் கால்வாயை நவீனப்படுத்துதல் என்ற பெயரில் கான்கிரீட் கரையும், தளமும் அமைக்கப்பட்டால் நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்துக்கு சிக்கல் ஏற்படும்.
இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு விவசாய சாகுபடிக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். ஏற்கனவே பி.ஏ.பி. திட்டம், முல்லைப் பெரியாறு பாசனத் திட்டத்தில் கான்கிரீட் கால்வாய் திட்டம் தோல்வியில் முடிந்துள்ளது என்றார்
கீழ் பவானி ஆயக்கட்டு பாசனதாரர்கள் சங்க செயலாளர் கி.வே.பொன்னையன் கூறியதாவது:
65 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட கீழ்பவானி பாசனக் கால்வாய் பல்வேறு இடங்களில் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், கடைமடை விவசாயிகளுக்கு உரிய அளவு தண்ணீர் கிடைப்பதில்லை. 20 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. இதற்கு தீா்வுகாணும் வகையிலே கீழ்பவானி பாசன வாய்க்காலை புனரமைக்க அரசு திட்டமிட்டு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் 200 கிலோ மீட்டர் தூரமுள்ள வாய்க்காலில் தொடர்ச்சியாக கான்கிரீட் அமைக்காமல் கரைகள் பலவீனமடைந்துள்ள பகுதிகளில் மட்டுமே கான்கிரீட் கரைகள் அமைக்கப்படுகின்றன. இதனால் தண்ணீா் வீணாவது தடுக்கப்பட்டு கடைமடை விவசாயிகளுக்கு உரிய அளவு கிடைக்கும். இதனால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை.
ஆனால், கீழ் பவானி ஆயக்கட்டு பாசனப் பகுதிகளில் இல்லாதவர்களும், வாய்க்காலில் இருந்து தண்ணீரை முறைகேடாக எடுத்து பயன்படுத்துபவர்கள் மட்டுமே இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடைமடையில் உள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களின் பாதுகாப்பைக் கருதி திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என்றார்..
Leave a Reply